சென்னை பெரியார் திடலில், ஜூலை 10ஆம் நாளன்று தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் கருத்தரங்கு ‘‘நீட் – மருத்துவக் கல்விக்கு தேவையில்லை” என்ற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பின்வருமாறு கூறினார்:
‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் ஒன்றியப் பட்டியலில் 44ஆவது அம்சத்தின்படி பொதுவான நுழைவுத் தேர்வுகள் நடத்துவதிலிருந்து பல்கலைக்கழகங்கள் விலக்களிக்கப்பட்டுள்ளன.
‘‘ஒரு மாநிலத்தில் இரு பல்கலைக்கழகங்களின் கேள்வித் தாள்களும், தேர்வு முறைகளும் ஒன்றாக இல்லாத நிலையில் நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு எப்படி நடத்தப்படலாம்?’’ என்று வீரமணி கேள்வி எழுப்பினார்.
‘‘மாணவர்களுக்கு இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பயற்சி நிலையங்களைத் தேடி அவர்கள் செல்ல நேருகிறது. ஏழைக் குடும்பத்து மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் செலுத்தும் வசதி இருக்காது. ‘நீட்’ தேர்வு அவர்களுக்கு மட்டுமல்ல; சமுதாயத்திற்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது’’ என்று கி.வீரமணி மேலும் கூறினார்.
மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்தார்:
‘‘பத்தாம் வகுப்பில் மாணவர்கள் படிக்கும்போதே நீட் தேர்வுக்கான பயிற்சியை – அதற்கென உள்ள பயிற்சி நிலையங்களில் துவங்கிவிடுகிறது. மாணவர்கள் பள்ளிக்குச் சென்று முறையான கல்விப் பாடத்தை கற்கும் அவசியமே இல்லாத நிலை ஏற்படுகிறது. கல்வியறிவு பெற்று வாழ்வில் முன்னேறத் தானே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இந்த அவல நிலை அந்த நோக்கத்தையே அல்லவா ‘நீட்’ சிதைத்து விடுகிறது? எனவே மாணவர்கள் கல்வியறிவு பெறுவதை ‘நீட்’ தேர்வு தடுக்கிறது என்றே கூறலாம்’’
அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘‘நீட் தேர்வு தடை செய்யப்பட்டே ஆகவேண்டும். – எதற்காக? என்பதை விளக்கக்கூடிய எல்லா தரவுகளும் ஏ.கே.ராஜன் ஆணையம் வழங்கிய அறிக்கையில் உள்ளன.
நன்றி: ‘தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’, 11.7.2024
No comments:
Post a Comment