கொச்சி, ஜூலை 11 ‘ஏர் கேரளா’ விமான நிறுவனம் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்றுள்ளது.
2025-ஆம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை ‘ஏர் கேரளா’ தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவுக்கு சொந்தமான முதல் விமான நிறுவனமாக ஏர் கேரளா உருவெடுத்துள்ளது.
கேரள அரசால் 2005-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டியால் ஏர் கேரளா விமானத் திட்டம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் வாழும் மலையாள மக்களின் கனவுத் திட்டமாக இது அறியப்பட்டது. வளைகுடா நாடுகளுக்கு குறைந்த செலவில் விமான சேவை இயக்குவதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம் நினைத்தபடி கைகூட வில்லை. எனினும், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு வளைகுடா நாடுகளில் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களான அஃபி அஹமது மற்றும் அயூப் கல்லடா இருவரும் இந்த திட்டத்தை தொடங்க ஆர்வம் காட்டினர்.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளா விமான நிறுவனத்தை உருவாக்கினர். தொடர்ந்து ஏர் கேரளா இணையதள டொமைனை கைப்பற்றி நிறுவனத்தை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டினர்.
அதன்படி, கிட்டத்தட்ட 19 ஆண்டு கழித்து அது சாத்தியமாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் கேரளா விமான நிறுவனம் தொடங்க ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதன் மூலம் ஏர் கேரளா நிறுவனம் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு விமான சேவைகள்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று விமானங்களுடன் தொடங்கப்படும் விமான சேவை பின்னர் படிப்படியாக வளைகுடா நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“கேரளாவில் நான்கு விமான நிலையங்கள் இருந்தாலும், சொந்த விமான நிறுவனம் இல்லை. அந்தக் குறையை எங்கள் நிறுவனம் போக்கும்” என்று அயூப் கல்லடா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment