புதுடில்லி, ஜூலை 7 நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரி வித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் நாளை 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது. இதுஒருபுறம் இருக்க நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என்று குஜராத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்னதாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், “நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது. முறைகேடுகள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஅய் விசாரணை நடத்தி வருகிறது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதனை முழுமையாக ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது. நீட் தேர்வுகள் வௌிப்படைத் தன்மையுடனும், நியாயமாகவும் நடைபெற புதிய சட்டத்தை இயற்றி உள்ளோம்.
தேர்வுகளை திறம்பட நடத்த பரிந்துரைகளை அளிக்க உயர் மட்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment