சென்னை, ஜூலை 9- சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்தார். சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நேற்று பொறுப்பேற்றார்.
110-ஆவது சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப் பட்டார். அவரது இடத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையராக, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த ஏ.அருண் நியமிக்கப்பட்டார். சென்னையின் 110-ஆவது காவல் ஆணையராக பொறுப்பேற்றார். அவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அருண் கூறியதாவது:
சென்னை மாநகரத்தில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட முன்னு ரிமை அளிக்கப்படும். நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதே என் முதல் பணியாக இருக்கும்.
காவல்துறை கடமையை சரியாக செய்தாலே, குற்றங்கள் குறையும். ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நம்பி இந்தபொறுப்பை ஒப்படைத்த முதலமைச்சரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
அருண் 1998ஆம் ஆண்டு பிரிவு அய்பிஎஸ் அதிகாரி. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சின்ன திருப்பதி அவரது ஊர். நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். மனைவி அய்ஆர்எஸ் அதிகாரி. 2 மகள்கள் உள்ளனர்.
1998இல் காவல்துறை கண்காணிப்பாள ராக நாங்குநேரி, தூத்துக்குடியில் பணியாற்றினார். 2002இல் காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கரூர், கன்னியாகுமரியில் பணியாற்றினார். துணை ஆணைய ராக சென்னை அண்ணா நகர், பரங்கிமலையிலும் காவல்துறை கண் காணிப்பாளராக சிபிசிஅய்டி பிரிவு, திருப்பூர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவிலும் பணியாற்றினார்.
2012இல் காவல்துறை துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று தலைமையிடம், சென்னை போக்குவரத்து வடக்கு, சட்டம் – ஒழுங்கு தெற்கு, திருச்சி சரகத்தில் பணியாற்றினார். 2016இல் அய்ஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையர், சென்னை போக்குவரத்து கூடுதல்காவல் ஆணையர், வட சென்னைகாவல் ஆணையர், காவலர் பயிற்சி பள்ளி ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
2023இல் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் பதவி உயர்வு பெற்று சிவில் சப்ளை சிஅய்டி, ஆவடி காவல் ஆணையர், சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் பங்களிப்பை செலுத்தினார். பல மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கி, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப் பிடத்தக்கது.
கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டேவிட்சன்: இதேபோல, தமிழ்நாடு காவல் துறையின் தலைமை யிட கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் முதலூரை சேர்ந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் முதுநிலை சமூகவியல் பட்டம் பெற்றார்.
1995ஆம் ஆண்டு பிரிவு அய்பிஎஸ் அதிகாரியான இவர் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக தருமபுரி, பரமக்குடியில் பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று கோவை துணை ஆணையர் மற்றும் கடலூர்,கரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பாளராக பணி யாற்றினார்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு மண்டல இயக்குநர், கோவை சரக காவல்துறை தலைவர் நிர்வாகம், காவல் துறை தலைவர் உளவுப் பிரிவு, மதுரை காவல் ஆணையர், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் உளவுப் பிரிவு என பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நன்மதிப்பை பெற்றவர். கண்டிப்பானவர். சிறப்பான பணிக்காக குடியரசுதலைவர் விருது, முதலமைச்சர் விருதுகளை பெற்றுள்ளார். அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, சிரியா உட்பட பல்வேறு நாடுகளில் நடந்த கூட்டங்களில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பங்கேற்றுள்ளார்.
No comments:
Post a Comment