வடமாநிலங்களில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

வடமாநிலங்களில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டங்கள்

featured image

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சி.பி.சி.அய்.டி. அறிக்கை தாக்கல்

மதுரை, ஜூலை 10- ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி? என்பது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர். வடமாநிலங்களில் நடந்த முறை கேடு குறித்து அதிர்ச்சித் தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த மோசடி குறித்து சி.பி.சி.அய்.டி. காவல்துறை யினர் விசாரித்த னர். இந்த முறைகேடு தொடர் பாக சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானவர்கள் கைதா னார்கள். ஆள்மாறாட்டத்துக்கு உதவியதாக இடைத்தரகர்கள் சிலரையும் காவல்துறையினர் பிடித்தனர்.

இந்த வழக்கில் தன்னை விடுவிக்கும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, 5 ஆண்டுகளாக இந்த வழக் கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த வழக்கில் நீட்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறேன் என்றும், இதுகுறித்து துணை சொலிசிட்டர் ஜெனரல் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.

ஒருவருக்காக 3 இடங்களில் தேர்வு
இந்த வழக்கில் ஏற்கெ னவே சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் சார்பில் மூடி முத்திரையிடப்பட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அதில், 2019ஆம் ஆண்டு நடந்த நீட்தேர்வை சென்னை, கோவை,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் பலர் எழுதி உள்ளனர். ஆனால் இவர்களது முகவரியில் டில்லி, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அங்கு உள்ளவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதில் ஒரு மாணவருக்கு ஒரே நாளில் 3 மாநிலங்களில் உள்ள தேர்வு மய்யங்களில் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இந்த 3 தேர்வு மய்யங்களிலும் எழுதியதேர்வுகளில் கிடைத்த அதிக மதிப்பெண்ணை (473) வைத்து அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் குறித்த விவரங்களை கேட்டு கடிதம் எழுதியும் இது வரை தேசிய தேர்வு முகமை தரவில்லை.
-இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment