புதுடில்லி, ஜூலை 9- நாடாளுமன்ற விதிகளை மீறுவது எதிர்க்கட்சிகள் அல்ல என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக மாநிலங்களவை உறுப்பினர் கபில்சிபல் தெரிவித்தார். பகுதிநேர அரசியல்வாதிகளால் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களும் நாடாளுமன்ற மாண்பை சீா்குலைத்ததாக மேனாள் ஒன்றிய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு ஜகதீப் தன்கா் கண்டனம் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கபில்சிபல் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இது முழுமையாக விவாதம் செய்யப்படாமல் அமல்படுத்தப்பட்டதாக எதி ர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தொடா்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து தொடா்பாக கடந்த 6.7.2024 அன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஜகதீப் தன்கா்,‘ நாடாளுமன்ற உறுப்பினர்களை பகுதிநேர உறுப்பினா்கள் என ஒருவா் கூறுகிறார். இது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தும் தரக்குறைவான இந்தக் கூற்றை அவா் திரும்பப் பெற வேண்டும்’ என்றார். இதற்குப் பதிலடி தரும் விதமாக எக்ஸ் வலைதளத்தில் கபில்சிபல் வெளியிட்ட பதிவில், ‘நாம் அனைவரும் பகுதிநேர உறுப்பினா்கள்தான் என்பதை ஜகதீப் தன்கா் புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற விதிகளை தினத்தோறும் மீறுவது யார்? உறுதியாக நாங்கள் (எதிர்க்கட்சிகள்) அல்ல’ எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment