சான் அன்டோனியோ, ஜூலை 10 அமெரிக்கா சான் அன்டோனியோ நகரில் சூலை 6ஆம் தேதி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவின் இணை அமர்வில் பெரியார் பன்னாட்டமைப்புக் கூட்டம் மிக்க எழுச்சியுடனும், உணர்ச்சியுடனும் நடைபெற்றது. திராவிட உணர்வாளர்கள் திரண்டு குழுமினர். மக்கள் சுயமரியாதையை எப்பொழுதும் போற்றி வாழவும், திராவிட செம்மல்களின் வரலாற்றை நினைவில் கொண்டு நன்றியுடன் வாழவேண்டிய கடமையையும் பற்றி கலந்துரையாடினோம். சுயமரியாதை- நூறாண்டுகள் என்று கொண்டாடினோம்.
கவிஞர் அறிவுமதி, தமிழ்க் கேள்வி செந்தில்வேல், ஆளூர் ஷாநவாஸ் , பாலச்சந்திரன் I.A.S , பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் விழாத் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் அனைவரும் உருக்கத்துடன் உரை நிகழ்த்தினர்.
அட்லாண்டாவில் கண்டெடுத்த திராவிட மாணிக்கம் கருஞ்சட்டைப் பெண்மணி ஜெயாமாறன் சுயமரியாதை நூற்றாண்டு வரலாற்றை உணர்ச்சி பொங்கப் பேருரை ஆற்றி அனைவரையும் நெகிழ்வித்தார். மென்துறை வல்லுநரான இவர், சுயமரியாதை வரலாற்றை , அதில் தலைவர்கள் ஒவ்வொருவர் ஆற்றிய பணியையும் விவரமாக எடுத்துரைத்தார். அயோத்திதாசர் பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன், வெள்ளுடை வேந்தர் தியாகராயர், நடேசனார், மருத்துவர் மாதவனார், பானகல் அரசர், முத்தைய்யா, ஓமந்தூர் ராமசாமியார்,சுயமரியாதை இயக்கத்தில் தலைமை தாங்கிய விசாலாட்சி அம்மையார், இந்திராணி அம்மையார், மீனாம்பாள் அம்மையார் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் படங்களைக் காண்பித்துப் பணிகளைப் போற்றிக் காட்டினார். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம் இரண்டையும் விரிவாக விளக்கினார். தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்டமே பாபாசாகேப் அம்பேத்கர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது என்பதைச் சொன்னார்.
சுயமரியாதைத் திருமணங்கள் பற்றி விளக்கமாகப் பேசிப் ‘புதுக்கோட்டை அண்ணன் குருசாமி, குட்டிசாமி- பிரகதாம்பாள் எனக்கு ரவிக்கை போட்டு திருமணத்தைச் செய்ததற்கு நன்றி என்று சொன்னது’ குடிஅரசு இதழில் வந்ததைச் சொன்னார். ரவிக்கை போடும் உரிமை கூட இல்லாமல் வாழ்ந்த பெண்கள்! தந்தை பெரியார் அறிவுக் கண்களைத் திறக்க எவ்வளவு அயராமல் உழைத்தார் எனபதைத்திரைப்படம் போல் சொல்வன்மையால் தெளிவுர உரை நிகழ்த்தி எங்களை எல்லாம் கவர்ந்து விட்டார்.
இவருடைய பேச்சையும் தொண்டையும் போற்ற மருத்துவர் சோம. இளங்கோவன் குரலை மாற்றிக்கொண்டு பெரியார் போலப் பேசி நிகழ்காலப் பெண்கள் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக வழி மொழிந்தார். இவ்வளவு திறமை உள்ள நம் பெண்கள் பற்றி மிகவும் பெருமை அடைகிறேன் என்று வாழ்த்தினார் .
இலக்குவன் தமிழ், ‘‘தமிழ்நாடு அரசு வரும் ஆண்டு 2025 ஜாதி ஒழிப்பு ஆண்டாக அறிவிக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை வைத்தார். கவிஞர் அறிவுமதி ஜெயா மாறனை வெகுவாகப் புகழ்ந்து ‘‘அவர் தமிழ் நாடு வரும் போதெல்லாம் கூட்டங்களில் பேச வேண்டும். நான் ஆசிரியர் வீரமணி அய்யாவிடம் சொல்கிறேன்’’ என்று பெருமைப்பட்டார் . ‘‘எனக்குக் கிடைக்கும் பெருமை எல்லாம் தந்தை பெரியார் தந்தது. எனக்குக் கிடைத்துள்ள இந்த விருது திராவிட இயக்கத்திற்கு கிடைத்த விருது. என்னுடைய பேச்சு நன்றிக் கடன்’’ என்றார்.
ஆளூர் ஷா நவாசு ‘மாண்புமிகு’ என்று அறிமுகப் படுத்தப்பட்ட போது ‘‘இல்லை மானமிகு’’ என்றார். ‘‘மாண்புமிகு வரும் போகும். மானமிகு அது தான் நிலையானது பெருமையானது’’ என்றார். ‘‘தந்தை பெரியாரால் தான் நாம் மனிதர்களாக வாழ்கின்றோம். அவருடைய கருத்துகளும் பேச்சுகளும் எதிர் மறையாக உள்ளது போன்று தோன்றும். காட்டுமிராண்டி என்று சொன்னவர்தான் திருக்குறளுக்கு விழா எடுத்தார். காங்கிரசை ஆதரித்தவர் தான் காங்கிரசை ஒழிப்பேன் என்றார். காந்தியை எதிர்த்தவர் தான் காந்தி தேசம் என்று பெயரிட வேண்டுமென்றார். ஆனால் அவ ருடைய கருத்துகள் ஆழமானவை. சுய மரியாதை இல்லாத சுதந்திரத்தினம் என்ன பயன்? என்று கேட்டார் பெரியார். நாம் பெரியாரை மேலும் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்றார்.
தமிழக் குரல் செந்தில்வேல் அவர்கள் சுயமரியா தைக்குப் பாடுபட்டத் தலைவர்களைப் பற்றிச் சிறப்பாகச் சொற்பொழிவாற்றிய ஜெயா மாறனைப் புகழ்ந்தார். ‘‘இன்றைய தேவை அது. நம் மக்கள் ஆண்ட பரம்பரை என்றெல்லாம் பேசிக்கொண்டுப் பார்ப்பனர்கள் மேடைகளில் படுத்தும் அவமானத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்களே’’ என்று வேதனைப் பட்டார் . ‘‘உங்கள் ஜாதிச் சண்டைகளை ஒதுக்கிவிட்டுச் சுயமரியாதையை மீண்டும் நிலை நாட்ட வேண்டும். இளைய தலைமுறைக்குச் சொல்ல வேண்டும்’’ என்று சொன்னார் .
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பெரும் பொறுப்பில் இருக்கும் செசில் சுந்தர் அவர்கள் ‘‘இன்றைய கால கட்டத்தில் கணினியில் செயற்கை நுண்ணறிவு மூலம் தந்தை பெரியார் அவர்கள் பேசுவது போலவும், கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் வைப்போம் . அதன் மூலம் அவர் கருத்துகளைப் பரப்புவோம். நான் பொறுப்பேற்றுச் செய்கிறேன்’’ என்று ஆக்கப் பூர்வமாகப் பேசினார் .
அறிஞர் பெருமக்கள் பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்., பொருளாதார வல்லுநர் ஜெயசந்திரன் தமிழ்நாட்டின் எதிர் காலம் , பொருளாதார முன்னேற்றம் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். மருத்துவர் திருநாவுக்கரசு அவர்கள் நீட்டின் கொடுமையைப் பற்றிய திரைப்படம் எடுத்ததைப் பற்றிச் சொன்னார் . ‘நீட்டை ஏன் ஒழிக்க வேண்டும்’ என்பதை விவரமாகப் பேசினார்கள். .
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் திராவிடமாடல் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.அமெரிக்க இந்திய காங்கிரசின் பொறுப்பாளர் சாம் பிட்ரோடாவின் உதவியாளர் சண்முகவேல் சங்கரன் காங்கிரசில் சமூகநீதி, சமத்துவம் புதிய முக்கியத்துவம் பெற்றுள்ளதை விளக்கினார். மூன்று மணிநேரம் நடைபெற்றது. திருச்சியிலிருந்து சுப்பிரமணி டல்லாஸ் நகரிலிருந்து வந்து விழாவில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவின் பல் வேறு மாநிலங்களிருந்து ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டது பெரு மகிழ்சசியாக இருந்தது .
கவிஞர் அறிவுமதி ‘‘என் அப்பா பகுத்தறிவு வாதியாக இருந்தும் கூட என் அம்மா அவர் அருகே உட்கார முடியாது. என் அக்காக்கள் படிக்க முடியவில்லை . இன்று நீங்களெல்லாம் இப்படி அருகருகே அமர்ந்துள்ளீர்கள் என்றால் அது தந்தை பெரியார் அவர்களால் வந்தது’’ என்று சொல்லி மகிழ்ந்தார் .சுயமரியாதை நூற்றாண்டு விழா இனிதாக மனநிறைவுடன் நடைப்பெற்றது. ஆங்கே நமது இயக்க நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தகவல்: சரோ இளங்கோவன் பெரியார் பன்னாட்டமைப்பு
No comments:
Post a Comment