வழமைபோல் இந்த ஆண்டும் குற்றாலத்தில் மாணவர்கள் – இளைஞர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்புகளும், ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக ஜூலை 4 முதல் தொடங்கி நான்கு நாட்கள் (4, 5, 6, 7 ஆகிய தேதிகளில்) குற்றாலம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் (பேருந்து நிலையம் அருகில்) நடந்தது. சுமார் 100 பயிற்சியாளர்களாக இருபால் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு, மிகுந்த கட்டுப்பாட்டுடன் – கழகமும், தலைமையும் பெருமைப்படும் அளவுக்கு வகுப்புகளில் ஆர்வமும், முனைப்பும் காட்டினர்.
வகுப்பெடுத்த விளக்கவுரையாளர்கள் தலைப்பை ஒட்டிய கருத்துகளை ஈர்ப்புடன் செவிமடுத்து, செரிமானம் செய்து கொண்டனர்!
இதில் 50 விழுக்காடு கல்லூரி பட்டதாரிகள், மற்றை யோர் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள்.
“வேடிக்கை காட்டும் வாடிக்கை” அவர்கட்கு இல்லை என்பதே இந்த இயக்கம் திராவிட நாற்றுகளை எப்படி உரமிட்டு வளர்க்கிறது என்பதை உலகுக்கு உணர்த்துவதாக அமைந்தது!
தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் (அவருக்கு முதல் நாள் ஏற்பட்ட உடல்நலக் குறைவினையும் ஒதுக்கி விட்டு கடமை உணர்வோடு பம்பரமாய்ப் பணி செய்தார்!). கழகக் காப்பாளர் டேவிட் செல்லதுரை, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.ஜெயக்குமார், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் முதலியோர் உழைப்பும் குறிப்பிடத்தக்கது.
45ஆம் ஆண்டு பெரியார் பயிற்சிப் பட்டறை சிறப்புடன் உழைத்த தோழர்கள்:
வடகரை வை.சண்முகம், இராசபாளையம் இல.திருப்பதி, கே.டி.சி. குருசாமி, பால்.இராசேந்திரம், நாத்திக பொன்முடி, சு.சவுந்திரபாண்டியன், மதுரை சுப்பையா, மதுரை ராக்கு (மகளிர்), குன்னூர் டாக்டர் கவுதமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
பயிற்சிப் பட்டறை பயிற்றுநர்கள்
நான் இரண்டு நாள்களில் மூன்று வகுப்புகளை நடத்தும் வாயப்புப் பெற்றேன். வகுப்பில் நான்கு நாளும் வகுப்பெடுத்த கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், முனைவர் ப.காளிமுத்து, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, பெரியார் மருத்துவக் குழுமம் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன், கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, பேராசிரியர் ஆ.திருநீலகண்டன், ப.க.ஊடகத்துறை மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், ப.க. துணைப் பொதுச்செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி, முனைவர் ந.எழில், திண்டுக்கல் ஈட்டி கணேசன், பட்டிமன்ற நடுவர் பால். இராசேந்திரம் ஆகியோரின் வகுப்புகளை மாணவர்கள் ஆர்வமுடன் கவனித்தனர்.
இதற்கு முன் எப்போதுமில்லாத அளவுக்குத் தென்காசி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் முழு முயற்சி எடுத்து “நம்மால் முடியாதது யாராலும் முடியாது, யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்ற திட சித்தத்துடன் பாராட்டத்தக்க வகையில் எவ்வித குறையுமின்றி சாதனை செய்து சரித்திரம் படைத்தார்கள்!
குற்றாலத்தில் கொட்டிய கொள்கை மழையில் நனைந்தோம். மறக்க முடியாத வகை நினைந்தோம்! நினைந்து நினைந்து நெஞ்சம் பூரித்தது.
‘திராவிட நாற்றுக்கள்’ கொள்கைப் பாசறை மிகச் செழிப்புடன் வளருவது உறுதி!
உழைத்த தோழர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் நன்றியும்!
இன்னும் இந்த பயிற்சி முகாம் எளிதாகவும், இயல்பாகவும் நடைபெற புத்தாக்கச் சிந்தனைகள் மலரட்டும்!
சங்கிலித் தொடர் போன்று நிகழ்வுகள், எனினும் சளைக்கவில்லை நமது தோழர்கள்!
இயக்கம் என்பதற்கு இதுவன்றோ சான்று. அடுத்து நீட் ஒழிப்பு வாகனப் பயணப் பிரச்சாரத்திற்குக் கிளம்பி விட்டனர் – வில்லிலிருந்து இடையறாது புறப்பட்ட அம்புகள் போல்!
இயக்கம் வளரட்டும்!!
வாழ்க பெரியார், வெல்க திராவிடம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.7.2024
No comments:
Post a Comment