விஷத்திற்கு தேன் தடவிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.!
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர் கி.வீரமணி நடத்திய வரலாற்றுப் பாடங்கள்!
குற்றாலம். ஜூலை 7, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் முதல் நாள் முற்பகலில், ‘நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்’ எனும் தலைப்பிலும், பிற்பகலில் ’இந்து – இந்துத்துவா – சங்பரிவார் – ஆர்.எஸ்.எஸ்’ எனும் இரண்டு தலைப்புகளிலும் ஆசிரியர் பாடம் நடத்தினார்.
45 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இந்த ஆண்டு, குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள திருமண மண்டபத்தில் 4.7.2024 அன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 96 மாணவர்கள் பங்கு பெற்றிருந்த இந்நிகழ்வில், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், “பெரியார் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பிலும், இரண்டாம் வகுப்பை ஆசிரியர்
கி. வீரமணி, “நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்” எனும் தலைப்பிலும், மூன்றாம் வகுப்பை முனைவர் ப.காளிமுத்து ”நீதிக்கட்சி வரலாறு” எனும் தலைப்பிலும், நான்காம் வகுப்பை மா.அழகிரிசாமி “தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பிலும், அய்ந்தாம் வகுப்பை மருத்துவர் இரா.கவுதமன், ”பேயாடுதல், சாமியாடுதல் – அறிவியல் விளக்கம்” எனும் தலைப்பிலும், ஆறாம் வகுப்பை ஆசிரியர் கி. வீரமணி “இந்து – இந்துத்துவா – சங்பரிவார் – ஆர்.எஸ்.எஸ்.” எனும் தலைப்பிலும், ஏழாம் வகுப்பை ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “தந்தை பெரியாரின் தொலைநோக்கு சிந்தனைகள்” எனும் தலைப்பிலும் நடத்தினர். முதல் நாளின் இறுதியில் ”பெரியார்” திரைப்படம் திரையிடப்பட்டது.
சுயமரியாதை இயக்கம் உருவானது ஏன்?
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முற்பகல், பிற்பகல் என இரண்டு வகுப்புகளை நடத்தினார். முதல் வகுப்பில் சுயமரியாதை இயக்கம் உருவானது ஏன்? எதற்கு? எப்படி? என்ற விளக்கங்களுடன் அதன் சாதனைகளை விளக்கினார். இரண்டாம் வகுப்பில் ஆர்.எஸ்.எஸ். உருவானது ஏன்? எதற்கு? எப்படி? அதன் வேதனைகள் என்ன என்பதை பட்டியலிட்டார். இரண்டு அமைப்புகளும் ஒரே காலகட்டமான 1925 இல் தொடங்கப்பட்டாலும், சுயமரியாதை இயக்கம் பிறவி பேதத்தை ஒழிப்பதற்காகவே தொடங்கப்பட்டது. ஆனால், பேதத்தை வளர்த்து அதன் மூலம் பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் இருக்கும் ஓர் அமைப்பில் பொது தேசம், பொது இனம், பொது நாகரிகம் அமைக்க வேண்டி விஷத்தில் தேன் தடவிக் கொண்டு செயல்பட்டு வருவது ஆர்.எஸ்.எஸ். என்று விவரித்தார். இதற்கு எடுத்துக்காட்டாக, பன்வர் மெக்கன்சி எழுதிய, “இந்துவாக இருக்க முடியாது ஏன்?” எனும் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, ‘நான் இந்துவாக இருக்க முடியாது. அப்படி இந்துவாக இருந்தால் நான் மனிதனாக இருக்க முடியாது’ என்று பன்வர் மெக்கன்சி குறிப்பிட்டுள்ளதை எடுத்துரைத்தார். அதே போல், அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, இந்து மதம் எங்கே போகிறது? எனும் புத்தகத்தின் துணையுடன் இந்துத்துவத்தை அம்பலப்படுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது என்பதை தரவுகளுடன் எண்பித்தார். ஜாதி, மதத்தை வளர்த்தெடுப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் வழிமுறைகள் என்பதைக் கூறி, ”திருநெல்வேலி மாவட்டத்தில் மறைந்து வருகிற, ஒழிந்து கொண்டிருக்கிற ஜாதிக்கு உயிர் கொடுக்கிறார்கள்’’ என்பதை ஜாதிக்கயிறு கலாச்சாரத்தை நினைவூட்டி புரியவைத்தார்.
ஜாதி என்பது தொழில் அடிப்படையில் உள்ளது என்று திரிபு பேசுகிற அவர்களுக்கு, DIVISION OF LABOURS அல்ல, DIVISION OF LABOURERS என்று அம்பேத்கர் சொன்னதை எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் ‘‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!, பிறப்பொக்கும் எல்லார்க்கும்’’ என்பதை குறிக்கோளாகக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ். அதற்கு நேரெதிரான கொள்கை உடையது என்பதை விளக்கி பாடத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment