விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 விழுக்காடு வாக்குப்பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 விழுக்காடு வாக்குப்பதிவு

featured image

விழுப்புரம், ஜூலை 11- விக்கிர வாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
இதையடுத்து, இத்தொகு திக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன் 10ஆம் தேதி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
ஜூன் 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 64 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்ட நிலையில், 35 மனுக்கள் நிராகரிக்கப் பட்டன. 29 பேரின் மனுக்கள் ஏற்கப் பட்டன.

இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை என்று அதிமுக அறிவித்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பரபரப்பாக நடந்த பிரச்சாரம் கடந்த 8ஆம் தேதி மாலை யுடன் ஓய்ந்தது.
இந்நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் முதல் மூத்தகுடிமக்கள் வரை அனைவரும் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
பதற்றமான மய்யங்கள்: மிக பதற்றமான மய்யங்களாக கண்டறியப்பட்ட ராதாபுரம், குண்டலப்புலியூர், பனையபுரம் கிராமங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக, ஒட்டன்காடு வெட்டி, காணை ஆகிய வாக்குச் சாவடிகளில் ஒரு மணி நேரமும், கருங்காலிப்பட்டு, கல்பட்டு, மாம் பழப்பட்டு, பொன்னங்குப்பம் வாக்குச் சாவடிகளில் அரை மணி நேரமும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பாமக வேட்பாளர் சி.அன்பு மணி, பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் வாக்களித் தனர். விக்கிரவாண்டி அரசு மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குச் சாவடி அலுவலர் பிரபா கரனை குளவி தாக்கியது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப் பட்டது. குளவிக் கூட்டை தீயணைப்பு வீரர்கள் அகற்றியதும், வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

மாலை 6 மணிக்கு பிறகும்.. கப்பியாம்புலியூர், வாக்கூர், உலகலாம் பூண்டி, ஒட்டன்காடுவெட்டி ஆகிய 4 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வரிசையில் நின்றிருந்த மொத்தம் 308 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. 6 மணிக்கு பிறகு வந்தவர்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 276 வாக்குச் சாவடிகளில் இருந்தும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மய்யமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண் ணிக்கை வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத் தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர் கள் வாக்களித்துள்ளனர்.

No comments:

Post a Comment