திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் - இன்று (7.7.1859) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 7, 2024

திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் - இன்று (7.7.1859)

featured image

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.ஜாதி பாகுப்பாட்டை முறியடித்து, சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்தார். தொழிலால் அவர் ஒரு வழக்குரைஞராக இருந்தாலும், அவர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், இந்தியாவில் சென்னை மாகாணத்தில் உள்ள பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் ஜூலை மாதம் 7ஆம் தேதி, 1859 ஆம் ஆண்டில், தெய்வபக்தி மிகுந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

தஞ்சையில் பள்ளியில், தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்த அவர், தனது கல்லூரிப்படிப்பைக் கோவையில் முடித்தார். எங்கு சென்றாலும் தீண்டாமைக் கொடுமைத் தலைவிரித்து ஆடுவதைக் கண்டு வெகுண்ட அவர், அதற்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று முடிவெடுத்தார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

தனது கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர், எழுத்தராக நீலகிரியில் உள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 1890இல் சென்னைக்கு வந்தார். 1891இல் ‘பறையர் மகாசன சபை’ மற்றும் 1893இல் ‘பறையன்’ என்ற திங்கள் இதழை தோற்றுவித்தார். 1900 ஆம் ஆண்டு வரை அவ்விதழை நடத்திய அவர், அதே ஆண்டில் வேலை தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு ஒரு மொழிப்பெயர்பாளராக நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்த அவர், 1921இல் இந்தியா திரும்பினார்.

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப் படி 1923 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப் பினராக நியமனம் செய்யப்பட்ட அவர், 1924இல் சட்ட மன்றத்தில், ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன்படி, ‘பொது வழியில் எந்தவொரு ஜாதி பாகுபாடின்றி, யார் வேண்டுமானாலும் நடக்கலாம். இத்தேசத்தில் உள்ள அனைத்து பொது உடைமைகளும், அனைவருக்கும் சொந்தமானவையே. மேலும், பள்ளர், பறையர் என்று அழைக்கப்படாமல், ஆதிதிராவிடர் என்று அழைக்கப்பட வேண்டுமென்றும், மது ஒழிப்புத் தீர்மானம், ஆலய நுழைவுத் தீர்மானம் போன்ற சமூக சீர்த்திருத்தங்களை நிறைவேற்றினார். மேலும், அவர் மணியக்காரர் முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்பினார்.

லண்டன் வட்டமேஜை மாநாடு

லண்டனில் 1930, 1931 மற்றும் 1932களில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்துகொண்டார் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழு உரிமை யைப் பெற்றுத் தர எண்ணி அவர்கள் இருவரும், அம்மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினர்.

No comments:

Post a Comment