தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ரூ.40 கோடியில் வளர்ச்சிப் பணி அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 7, 2024

தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ரூ.40 கோடியில் வளர்ச்சிப் பணி அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

featured image

சென்னை, ஜூலை 7- தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ரூ.40 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி படகு இல்லம் வளாகத்தில் தொங்கும் பாலம், ஜிப் லைன் உட்பட பல்வேறு சாகச விளையாட்டுகள் கொண்டு வருவதற்கான பணிகள் நடக்கிறது. இப்பணிகளை நேற்று (6.7.2024) சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சுற்றுலாத்துறை ஆணையாளர் சமயமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் அருணா உடன் இருந்தார்.

பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சுற்றுலா பயணிகள் பலரும் ஊட்டிக்கு வந்துவிட்டு திரும்பி விடுகின்றனர். அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில், கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில் சுற்றுலாத்துறை மூலம் புதிதாக சுற்றுலா தலம் உருவாக்க வாய்ப்புள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 28 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த ஆண்டு 32 கோடியாக அதிகரித்துள்ளது. பல்வேறு சுற்றுலா தலங்களிலும், புதிதாக சாகச விளையாட்டுகள் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் ரூ.40 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றிய அரசிடமும் நிதி கேட்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிதி வந்தால், மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை
ஜூலை 23இல் தாக்கல்
வருமான வரிச்சலுகை எதிர்பார்ப்பு

புதுடில்லி, ஜூலை 7- ஜூலை 22ஆம் தேதி நாடாளு மன்ற நிதிநிலை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 23ஆம் தேதி 2024-2025ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

18ஆவது மக்களவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கியது. 24, 25ஆம் தேதிகளில் மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர் 26ஆம் தேதி மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா மக்களவைத் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதிநிலை அறிக்கையில் தொலைநோக்குடன் கூடிய பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும். ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அசாமில் ரூ.27 ஆயிரம் கோடியில் ‘செமி கண்டக்டர்’ தொழிற்சாலை, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நாரி சக்தி விதான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங் களுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்கும். இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத் தொடர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. 23ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வார். அதைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த நிதிநிலை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும். 3ஆவது முறையாக பிரதமர் மோடிதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் முதலாவது நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரை கூட்டுவதற்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பரிந்துரையின் பேரில் கூட்டத்தை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுமதி வழங்கிஉள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவர்கள்தான் சாமியார்கள்
திருட்டு வழக்கில் 16 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்த சாமியார் கைது!

நெல்லை, ஜூலை 7- நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா வடுகச்சிமதிலைச் சேர்ந்தவர் ராமையா என்ற ராமச்சந்திரன். இவரை கடந்த 2006ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் ஏர்வாடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் வெளியே வந்த ராமையா என்ற ராமச்சந்திரன், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

விசாரணையில் ராமையா என்ற ராமச்சந்திரன், திருவண்ணாமலையில் சாமியாராக தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவண்ணாமலை சென்ற தனிப்படையினர் ராமையா என்ற ராமச்சந்திரனை கைது செய்தனர்.

No comments:

Post a Comment