இதுதான் கடவுள் பக்தியின் யோக்கியதை கோவிலில் பெண் பக்தர்களிடம் 16 பவுன் சங்கிலிகள் பறிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

இதுதான் கடவுள் பக்தியின் யோக்கியதை கோவிலில் பெண் பக்தர்களிடம் 16 பவுன் சங்கிலிகள் பறிப்பு

featured image

பெரம்பலூர், ஜூலை 8- பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் 5.7.2024 அன்று குட முழுக்கு நடத்தது. பின்னர் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவைப் பெறுவதற்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டி யடித்து கொண்டு உணவைப் பெற்று சென்றனர்.

அப்போது உணவை வாங்குவதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த வெங்கலம் நடுவீதியை சேர்ந்த நீலாவதியின் (வயது 55) 3 பவுன் சங்கிலியும், பாளையம் பகுதியை சேர்ந்தவர்களான சத்தியபாமாவின் (வயது 55) 5 பவுன் தாலி சங்கிலியும், முத்துக்குமாரின் வீட்டிற்கு வந்த அவருடைய மாமியார் நீலாம்பாளின் (வயது 65) 5 பவுன் தாலியும், மேலும் அலமேலுவின் (வயது 75) 3 அடுத்தடுத்து திருட்டுபோயின.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பக்தர்கள் திருடன், திருடன் என்று கூச்சலிட்டனர். அதற்குள் திருடியவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிசென்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி நோட்டமிட்டு வயதான பெண்களிடம் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் பக்தர்களிடம் சங்கிலியை பறித்து சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ரவுடிகளை கண்காணிப்பது எப்படி?
காவல் நிலையங்களுக்கு வழிகாட்டி புத்தகம்

சென்னை, ஜூலை 8 ‘பருந்து’ செயலி மூலம் ரவுடிகளை கண்காணிப்பது எப்படி என அனைத்து காவல் நிலைய காவல்துறையினருக்கு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.

கொலை, முன் விரோத கொலை, ரவுடிகள் மோதல், கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கடத்தல் உட்பட அனைத்து வகையான குற்றச்செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரவுடிகளை தொழில் நுட்பம் வாயிலாக கண்காணிக்கும் வகையில், ‘பருந்து’ செயலி உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இருப்பவர்கள், அவர்களின் தற்போதைய நிலை, அவர்களின் குற்றச் செயல்கள் விவரம், அவர்கள் மீது உள்ள வழக்கு விவரங்கள், அவரது எதிர்தரப்பினர், கூட்டாளிகள், சிறையில் இருக்கிறாரா, வெளியே இருக்கிறாரா, அவரது பகுதியிலேயே வசிக்கிறாரா, வேறு எங்கேனும் இடம் பெயர்ந்து விட்டாரா என்பது உட்பட ரவுடிகளின் அனைத்து விவரங்களும் நாள்தோறும் கண்காணித்து ‘பருந்து’ செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.

மேட்டூருக்கு நீர்வரத்து
2,832 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர், ஜூலை 8 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, கருநாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 5 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து கடந்த 4-ஆம் தேதி 1,223 கன அடியாகவும், 5-ஆம் தேதி 1,281 கன அடியாகவும், நேற்று (7.7.2024) 1,465 கன அடியாகவும் இருந்த நீர்வரத்து இன்று 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது.இதனிடையே, காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.தற்போது, அணையின் நீர்மட்டம் 39.76 அடியில் இருந்து 40.05 அடியாகவும், நீர் இருப்பு 11.96 டிஎம்சியில் இருந்து 12.11 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.

கருநாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ள நிலையில் பிலிகுண்டுலு பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

No comments:

Post a Comment