சென்னை, ஜூலை 7- சென்னை தலைமைச்செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், Nettur Technical Training Foundation (NTTF) நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து, பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனத்தின் பல்வேறு பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்நுட்பக் கல்வி, அய்.டிஅய் படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ தமிழ்நாடு அரசின் பழங் குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மலைப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு பழங் குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், துறைச் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர் / மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை யில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட 200 பழங்குடியின இளைஞர்களுக்கும் பயிற்சிகள் அளிக்க உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி உத்தரவுகள் பெற்ற 200 பழங் குடியின இளைஞர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சிக் கழகத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கருநாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள Nettur Technical Training Foundation (NTTF) என்ற பயிற்சி நிறுவனத்தின் மூலம் 3 மாத காலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதுமட்டுமின்றி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற இளைஞர்களில், 146 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனமான ZF Rane Automotive India Private Limited மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தலைசிறந்த இந்திய நிறுவனங்களான Shanthi Gears Limited, HDB Financial Service, Tube Investment of India, KUN Capital Motors Private Limited போன்ற நிறுவனங்களின் மூலம் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் Computerised Numerical Control பிரிவில் 67 இளைஞர்களும், Customer Relationship Management பிரிவில் 79 இளைஞர்களும் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர்களுக்கு நேரில் வழங்கினார். பணிநியமன ஆணைகள் வழங்கப் பட்ட 146 இளைஞர்களில் 40 பெண்கள் அடங்குவர். இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், முதலமைச்சரின் கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment