அலிகார், ஜூலை 7- உத்தரப் பிரதேசத்தில் நெரிசலுக்கு 134 பேர் உயிரிழந்த நிகழ்வில் பலியானோர் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் கூறினார். நிர்வாகம் தவறு செய்தி ருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
6 பேர் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி சாமியார் போலே பாபா பங் கேற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து பொது மக்கள் வெளியேறியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 134 பேர் பலியானார்கள்.
இன்னும் 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந் நிகழ்வு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத் துள்ளது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். சாமியார் போலே பாபா தலைமறைவாக உள்ளார். பலியா னோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,நாடாளுமன்ற மக்க ளவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி 5.7.2024 அன்று ஹத்ராசுக்கு நேரில் சென்று பலியானோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் அதிகாலையிலேயே டில்லியிலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு, உத்தரப்பிரதேசத்துக்கு வந்தார். அங்கு மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா சிறீநேட் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து கொண்டனர்.
முதலில், காலை 7.15 மணிக்கு அலி காரில் உள்ள பிலாக்னா கிராமத்துக்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு பலியா னோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், காலை 9 மணிக்கு ஹத்ராசில் உள்ள வைபவ்நகர் காலனிக்கு சென்றார். பலியானோரின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நிகழ்வு எப்படி நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஏராளமானோர் பலியாகி உள்ள னர். எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இது துயரமான நேரம். பலியானோர் குடும்பங்களுடன் தனிப்பட்ட முறையிலும் உரையாடினேன்.
நான் அரசியல் கண்ணோட்டத்தில் பேச விரும்பவில்லை. நிர்வாகத்தின் தரப்பில் சில தவறுகள் இருக்கின்றன. அவற்றை அடையாளம் காண வேண்டும். காவல்துறை தரப்பில் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு ஏற்பா டுகள் செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அம்மக்கள் துயரத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கிறார்கள். அவர்களது சூழ்நிலையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
பலியானோரின் குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்குமாறு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்தை கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மக்கள், அவர்களுக்கு இப்போது இழப்பீடு தேவை. 6 மாதங்களோ அல்லது ஓராண்டோ கழித்து நீங்கள் இழப்பீடு கொடுத்தால், அது யாருக்கும் பயன்படாது. எனவே, கூடிய விரைவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். -இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்
ஹத்ராசை சேர்ந்த ஹரிமோகன் என்பவர், தன்னுடைய அத்தையை இழந்தார். அவரை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இதுபற்றி ஹரிமோகன் கூறியதாவது:-
ராகுல்காந்தி எங்களுடன் உரையாடி னார். அனுதாபம் தெரிவித்தார். இழப்பீட்டு தொகையை அதிகரிக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார். -இவ்வாறு அவர் கூறினார்.
நெரிசலில் தனது பாட்டியை பறி கொடுத்த மிருத்யுஞ்சய் பாரதி (வயது 22) என்பவர் கூறுகையில், “எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சினைகள் நடைபெறாமல் இருப்பதற்காக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவதாக ராகுல்காந்தி தெரிவித்தார்” என்றார். ராகுல்காந்தி வருகையை யொட்டி, ஹத்ராசில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment