நாம் எல்லோருமே இதை கவனித்தி ருப்போம். ஈரமான பொருட்களைக் கையாளும்போதோ அல்லது தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு மேல் இருக்கும்போதோ நம் உள்ளங்கை மற்றும் விரல்களின் தோல் சுருங்கிப்போயிருக்கும். நீர் பட்டால் மட்டும் ஏன் தோல் சுருங்கிப்போகிறது என்று நினைக்காதீர்கள், நீர் மட்டுமல்ல, பெட்ரோல், டீசல், எண்ணெய் என்று எந்தத் திரவமாயிருந்தாலும், நம் விரல்கள் அப்படித்தான் சுருங்கிப்போகும்.சரி, அது ஏன் சுருங்கிப்போகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தச் சுருக்கத்துக்கு காரணம் சவ்வூடு பரவல் (osmosis) என்று நினைத்திருந்தனர். ஒரு மெல்லிய பரப்பின் வழியாக ஒரு திரவம் அதிகச் செறிவுள்ள பக்கத்தில் இருந்து செறிவு குறைவான பக்கத்துக்கு கடத்தப்படும் செயல்முறை. அதாவது, சருமத்தின் வழியாக நீர் புகுந்து, சருமத்தின் மேற்புறத்தை ஊறிப்போய் உப்பச் செய்கின்றன. ஆனால், அதன் அடிப்புறத்தில் இருக்கும் திசுக்களை அதனால் அப்படி உப்பச் செய்ய முடியாது. கொள்ளளவும், பரப்பளவும் அதிகமான மேற்புறம் சமமாக இல்லாமல் சுருக்கம் விழ ஆரம்பிக்கிறது. இதுதான் காரணம் என்று நம்பி வந்தனர்.
ஆனால், 1930இல் ஒரு மருத்துவரின் கவனிப்பு, இந்தத் தகவலைப் பொய்யாக்கியது. தன் வலது கையில் மோதிர விரல், சுண்டு விரல் தவிர மீதி விரல்கள் எல்லாம் நரம்புகள் பாதிக்கப்பட்டு, உணர்ச்சி இழந்த ஒரு சிறுவனுக்கு, நீர் பட்டால் உணர்ச்சி இருக்கும் விரல்களில் மட்டும் இந்தச் சுருக்கங்கள் ஏற்பட்டன. உணர்ச்சிகள் இல்லாத விரலில் ஏதும் நடக்கவில்லை.
இது சவ்வூடு பரவல் மாதிரியான இயற்பியல் நிகழ்வு எனில், நரம்புகள் இருக்கிறதோ இல்லையோ, உணர்ச்சிகள் இருக்கிறதோ இல்லையோ நிகழ வேண்டுமல்லவா? மேலும், இது உடலின் எல்லா இடங்களிலும் நடைபெறுவதில்லை. உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் மட்டுமே நிகழ்கிறது. அப்படியானால், இது நரம்பு மண்டலத்தின் செயல். நம்முடைய கட்டுப்பாடின்றி இயங்கும் தானியங்கி நரம்பு மண்டலம் (autonomous nervous system) நிகழ்த்தும் செயல். மேற்புறத் தோலுக்கு அடியில் குறிப்பிட்ட ரத்த நாளங்களுக்கான ரத்த ஓட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திச் சுருங்கவைக்கிறது.
ஆனால், ஆய்வாளர்களுக்கு ஒரு புதிர் இருந்தது. இதயத் துடிப்பு, நுரையீரல் விரிந்து சுருங்குதல் போன்ற உயிர்வாழ்தலுக்கு அவசியமான செயல்பாடுகளைத்தான் தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. அப்படியென்றால், இந்தச் சுருங்கி விரிதலுக்கும் ஏதோ ஒரு பரிணாமவியல் காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்தக் காரணம்தான் பிடிமானம் (grip). ஈரமான ஒரு பொருளைத் தொடுகையில், அதன் பரப்பில் இருக்கும் திரவத்தால் வழுக்கிக்கொண்டு பிடி நழுவலாம். இப்படி ஏற்ற இறக்கமாக, மேடு பள்ளமுமாக சருமம் ஆகிவிட்டால் நல்ல பிடிமானம் கிடைக்கும். சாலையில் ஓடும் வாகனங்களின் டயர்களில் நடுவடுவே பள்ளங்கள் (treads) இருப்பது இதனால்தான். இந்தப் பள்ளங்கள்தான், நீர் தேங்கி இருக்கும் பரப்புகளில் வாகனம் செல்லும்போது நீரை இந்தப் பள்ளங்கள் வழியே வழியவிட்டு, சாலையில் வழுக்காமல் செல்ல உதவுகின்றன.
ஒரு படி மேலே போய் ஆராய்ச்சி யாளர்கள், நீரில் ஊறினால் வரும் சருமச் சுருக்கங்களைப் படமெடுத்து, கணித ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் ஆராய்ந்திருக்கிறார்கள். ஒரு மேடு, அதைச்சுற்றி இருக்கும் பள்ளங்கள், அதன் அமைப்பு எல்லாமே மலையில் இருந்து வழிந்தோடும் ஒரு சுனை இருக்கிற பாதைக்கு ஒப்பாகச் இருக்கிறதாம். சுனை நீர் வழிவதுபோல், பள்ளங்கள் வழியே நீரும் வழிந்தோடிவிடும். கான்டூரிங் (contouring) என்றெல்லாம் விளக்க ஆரம்பித்தால் குழம்பிப் போவோம்.
No comments:
Post a Comment