ஊத்துக்கோட்டை, ஜூன் 4– ஊத்துக்கோட்டை அருகே காட்டுக்குள் குழிகள் தோண்டி அடையாளம் தெரியாத மனிதர்கள் மாந்திரீகம் செய்தனர். நரபலி கொடுக்க திட்டமா? என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அல்லிக்குழி மலைத் தொடரை ஒட்டி உள்ளது பிளேஸ்பாளையம் கிராமம், அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி இமானுவேல் தன்னுடைய வீட்டு தேவைக்காக அதன் அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் விறகுகளை வெட்டி சேகரித்து வந்தார்.
அந்த பகுதியில் மாந்திரீகம் செய்யப்பட்டு குழிகள் தோண்டப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளரான சீமோன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். சீமோன் தன்னந்தனியாக அங்கு சென்றார்.
அப்போது தாடியுடன் கூடிய மர்ம நபர்கள் 5 பேர் முழங்காலிட்டு கண்களை மூடிக் கொண்டு மந்திரித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தப்பி ஓட்டம்
அவர் அங்கிருந்து மெதுவாக திரும்பி கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காட்டுப்பகுதிக்கு விரைந்தனர்.
அவர்களை கண்ட 5 பேரும் அங்கிருந்து சிவப்புநிற காரில் தப்பிச் சென்றனர்.
அதை தொடர்ந்து அங்கு சென்ற இளைஞர்கள் காட்டுப்பகுதியில் சுற்றி பார்த்தனர்.
3 இடங்களில் சிறிய, பெரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.
குழியில் மனித எலும்பு துண்டு போடப்பட்டு அந்த குழியை சுற்றி ஆணிகள் அடிக்கப்பட்டு சிகப்பு நிற துணி வைக்கப்பட்டு அதன்மீது எலுமிச்சை பழம் மாந்திரீகம் செய்தும், குங்குமம் தெளிக்கப்பட்டும் பால், தயிர், எண்ணெய் போன்ற பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நரபலி கொடுக்க திட்டமா?
நரபலி கொடுக்க திட்டமிட்டு புதைகுழி தோண்டப்பட்டதா? என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர்.
கிராம இளைஞர்கள் கத்தி, கம்பு போன்றவற்று டன் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இரவு, பகலாக காட்டுப்பகுதியில் முகாமிட்டு வருகின்றனர்.
வழக்கமாக இரவு 12 மணி அளவில் தூங்கச் செல்லும் பொதுமக்கள் இந்த நிகழ்வால் மாலை 6 மணிக்கே அனைத்து வீடுகளிலும் கதவுகள் அடைக்கப்பட்டு வீட்டில் முடங்கி விடுகின்றனர்.
இது குறித்து பென்னாலூர்பேட்டை காவல்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment