'மோடி பிராண்ட்' காலம் முடிந்து விட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

'மோடி பிராண்ட்' காலம் முடிந்து விட்டது

கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்?

சஞ்சய்ராவத் கணிப்பு

புதுடில்லி, ஜூன் 6 பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியமைக்க உள்ளது. இதனை முன்வைத்து மோடி மற்றும் பாஜக ஆட்சியை சஞ்சய் ராவத் கடுமையாக தாக்கியுள்ளார்.

“மோடி பிராண்ட் என்பதன் காலம் முடிந்து விட்டது. மோடிக்கான மரியாதையும் காலாவதியாகி விட்டது. மோடியை பிரதமராக கொண்ட ஆட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்து விட்டனர். மேலும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு என பலவீனமான இரு தூண்களை நம்பி எழுப்பப்படும் கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கூடவே காங்கிரஸ் கூட்டணி சார்பில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருக்கு தூண்டிலிடவும் சஞ்சய் ராவத் மறுக்கவில்லை. “இந்த இருவரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் சர்வாதிகாரத்தை ஆதரிப்பார்கள் என நான் நம்பவில்லை. எனவே அவர்களை ஏற்றுக்கொள்ளவும் இந்தியா கூட்டணி தயாராக இருக்கும்” எனவும் சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆனால் சஞ்சய் ராவத்தின் கணிப்பு மற்றும் எதிர்பார்ப்புக்கு மாறாக சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் பாஜக தலைமையிலான தே.ஜ.கூ. கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கூட்டணி அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளனர். பாஜக தரப்பும் இந்த இரு தலைவர்களின் நிபந்தனைகளுக்கு காது கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை வென்றது. இது கடந்த 2019 தேர்தலில் வென்ற 303 இடங்களை விட கணிசமான எண்ணிக்கையில் குறை வாகும். மாறாக காங்கிரஸ் கட்சி 99 இடங்களை வென்று இம்முறை வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

No comments:

Post a Comment