தமிழ்நாடு, பாஜகவுக்கு ஓரிடம் கூட தராமல் மாறுபட்டு நிற்பது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

தமிழ்நாடு, பாஜகவுக்கு ஓரிடம் கூட தராமல் மாறுபட்டு நிற்பது ஏன்?

ஒன்றியத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக. இதனை சாத்தியமாக்கிய பாஜகவால் தமிழ்நாட்டில் ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 23 இடங்களில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், மோடியும், அமித் ஷாவும் பல முறை வருகை தந்து ஆக்ரோஷமாக பிரசாரம் செய்தாலும் கூட அக்கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

திமுக, அதிமுக தயவின்றி 2014ஆம் ஆண்டிலேயே ஓரிடத்தை வென்ற பாஜக, ஒன்றியத்தில் ஆட்சி புரிந்த அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வெகுவாக வளர்ந்துவிட்டோம் என்று கூறுகிறது. கருத்துக் கணிப்புகளும் பாஜகவின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருந்தன. ஆனாலும், தேர்தல் களத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தமிழ்நாடு இப்போதும் பாஜகவுக்கு சவாலான மாநிலமாகவே தொடர்கிறது. என்ன காரணம்?

நாடாளுமன்ற தேர்தல் வரலாறு கூறுவது என்ன?

வரலாற்றை புரட்டி பார்த்தால், தமிழ்நாடு எப்போதுமே பாஜகவுக்கு ஆதரவளிக்கும் மண்ணாக இருந்ததில்லை. 1951ஆம் ஆண்டு ஜன சங்கமாக உருவாகி, அவசரநிலை காலத்தில் ஜனதாவில் சங்கமமாகி, பின்னர் 1980இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி பரிணமித்தது.

1984ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 2 எம்.பி.க்களை பெற்ற பாஜக, அடுத்து வந்த 1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற் தேர்தலில் 85 இடங்களை வெற்றி பெற்றது. அடுத்தடுத்த தேர்தல்களில் படிப்படியாக தனது பலத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்திய அதேநேரத்தில், காங்கிரசின் அடித்தளத்தையும் ஆட்டம் காணச் செய்தது பாஜக. குறிப்பாக, ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பிரமாண்ட வளர்ச்சி கண்டது.

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நிலைமை வேறாக இருந்தது. இந்தியாவிலேயே முதல் மாநிலக் கட்சியாக 1967இல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது திமுக. திமுகவிலிருந்து பிரிந்த எம் ஜி ஆர் தொடங்கிய அதிமுக 1977ஆம் ஆண்டு முதன் முதலில் ஆட்சி அமைத்தது. அதுமுதல் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே தமிழ்நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பாஜக 1998ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் 3 இடங்களிலும், 1999ஆம், ஆண்டு திமுக கூட்டணியில் 4 இடங்களிலும் வென்றது. 2014ஆம் ஆண்டு திமுக, அதிமுக கூட்டணி இல்லாம லேயே கன்னியாகுமரி தொகுதியில் வெற்றியை ருசித்தது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்த லில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டி யிட்டாலும் ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

2024இல் தமிழ்நாட்டில் பாஜக

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் 23 தொகுதிகளில் தாமரை சின்னம் களம் கண்டது. கோவையில் பாஜக தலைவர் கே அண்ணாமலை 1,18,068 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரான கணபதி ராஜ்குமாரிடம் தோற்றுப் போனார். இதுவே பாஜக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற தொகுதியாகும்.
தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து தமிழ்ப் பேராசிரியர் வீ.அரசு கூறுகையில், “தமிழ்நாட்டின் திராவிட மனநிலையே பாஜக – எந்த தொகுதியிலும் வெற்றி பெறாததற்கு காரணம். இதில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்குமே பங்குண்டு. பாஜக-அதிமுக ஒரே கூட்டணியில் இருந்திருந்தால் ஏழு அல்லது எட்டு இடங்களை பாஜக கைப்பற்றியிருக்கக் கூடும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி இதை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அதிமுகவில் பாஜக மீது கடுமையான வெறுப்பு நிலவுகிறது. தமிழ்நாட்டில் மதம் ஒரு அரசியல் பிரச்சினையாக மக்கள் மனதில் பதியாது. பாஜக இந்து இந்து என்று எவ்வளவு கூக்குரலிடுகிறதோ, அந்த அளவு இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் திராவிட கட்சிகள் பக்கம் தள்ளிவிடும். மேலும் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு இந்த நிலைமை மாறாது” என்கிறார்.

எனினும், பாஜக தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்ற நிலை மாறி வருகிறது என்று சுட்டிக்காட்டு கிறார். “பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்ததும், அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 9 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்ததும், அவர்கள் வளர்ந்து வருகிறார்கள் என்பதற்கான அறிகுறி. இதற்கு ஊடகங்கள் பெரும்பங்காற்றியுள்ளன. அரசியல் சித்தாந்தப் பற்று இல்லாதவர்கள் குறிப்பாக இளைஞர்கள், மத்திய தர வகுப்பினர் ஊடகங்கள் உருவாக்கிய மாயையில் சிக்கியுள்ளனர். ஆளுநர் ரவி, பல கல்லூரிகளின் மாணவர்களுடன் கூட்டங்கள், பயிற்சி பட்டறைகள் நடத்தியது முதல் முறை வாக்காளர்களை கவர உதவியது” என்றார்.

தமிழ்நாட்டில் பாஜகவின் தேர்தல் உத்தி கை கொடுத்ததா?

தமிழ்நாட்டில் இந்த முறை மிக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவில் அளித்த முதல் ஊடக நேர்காணல், வெள்ளை சட்டை, வேட்டி , துண்டு அணிந்து ஒரு தமிழ் தொலைக்காட்சிக்கு பேசியதாகும்.

பாஜகவின் இரு முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்நாட்டிற்கு பல முறை நேரில் வந்து பிரச்சாரம் செய்திருந்தனர். பிரச்சார மேடைகளில் தமிழ்நாட்டுடன் தனது நெருக்கத்தை எடுத்துக் கூறியும் திமுகவை மிக கடுமையாக தாக்கியும் பேசியிருந்தார் மோடி. அதிமுகவுடன் கூட்டணி முறிந்தாலும், அக்கட்சியின் மேனாள் பொதுச் செயலாளர் மறைந்த ஜெ ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.
தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது, “தேர்தல் முடிவுகளை நாங்கள் தோல்வியாக பார்க்கவில்லை. திராவிடக் கட்சிகளின் தோளில் நிற்காமல் தனியாக நிற்கலாம் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. நாங்கள் நடந்து செல்லும் பாதை சரியான பாதை என்று மக்கள் கூறியுள்ளனர். ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மாறுபட்டு நிற்பது ஏன்?

கருநாடகாவில் 28 தொகுதிகளில் 17 இடங்க ளையும் தெலங்கானாவில் 17 இடங்களில் எட்டு இடங்களையும் பெற்றுள்ளது பாஜக. ஆந்திராவில் 25 இடங்களில் 21 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசின் கோட்டையாக இருக்கும் கேரளாவில் முதல் முறையாக பாஜக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுள்ளது.

இந்த மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பாஜக வுக்கான சவால் வித்தியாசமானது என்கிறார் அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன். “தமிழ்நாட்டில் பாஜக போட வேண்டியது தத்துவார்த்த சண்டை. இந்து, முஸ்லிம் என பிரித்து வாக்குகளை பெறுவது கேரளாவில் சாத்தியமாகலாம், தமிழ்நாட்டில் முடியாது. தமிழ்நாடு எப்போதுமே பலமாக தன் குரலை உயர்த்திப் பேசும் மாநிலமாகும். தொகுதி மறுசீரமைப்பு, நிதி பங்கீடு, மொழிப் பிரச்சினை என அனைத்து விவகாரங்களிலும் தனது மாற்றுக்கருத்துகளை வலுவாக எடுத்து வைத்துள்ளது. எனவே திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதல் பல நாட்கள் நீடிக்கப் போவதாகும்” என்றார்.

தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்கிறார் அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன். “23 இடங்களில் போட்டியிட்டு 11.24% வாக்குகள் பெற்றது பெரிய விஷயம் இல்லை. பாஜக எதிர்ப்பார்த்து 20% வாக்குகள் – குறைந்தது 15% வாக்குகள்.” என்கிறார் அவர்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ள பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், இந்த தேர்தலை முடிவுகளை நினைத்து அதிகம் வருத்தப்பட வேண்டியது அதிமுக தான் என்றார். “பாஜக தனித்து 11.24% வாக்குகளையும், கூட்டணி கட்சிகள் சுமார் 6% வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக 20.46% வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியாக இருந்திருந்தால் மக்களிடம் பலமான கூட்டணி என்று எண்ணம் உருவாகி கிட்டத்தட்ட 17 இடங்களை பெற்றிருக்கலாம். இந்த முறை நாங்கள் 10 முதல் 12 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எதிர்ப்பார்தோம். அதிகரித்த வாக்கு சதவீதம் வரும் காலங்களில் சீட்டுகளாக மாறும்” என்றார்.
– நன்றி: பிபிசி தமிழ் இணையம், 6.6.2024

No comments:

Post a Comment