கொச்சி, ஜூன் 15- குவைத்தில் நடந்த தீ விபத்தில் 50 பேர் பலியாகினர். இதில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். அதிலும் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். உயிரிழந்த இந்தியர்களில் 23 பேர் கேர னாவை சேர்ந்தவர்கள். மேலும் அந்த மாநிலத்தை சேர்ந்த பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த கேரள மக்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பவும், காயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை ஏற்பாடு செய்யவும் மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜை குவைத்துக்கு அனுப்ப மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை என வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘தீவிபத்தில் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு உதவுவதற்காக ஒன்றிய அரசிடம் நாங்கள் கேட்டது குவைத் செல்வதற்கான அனுமதி மட்டும்தான். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது’ என தெரிவித்தார். முன்னதாக ஒன்றிய அரசு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கையில் வீணா ஜார்ஜ் நீண்டநேரம் விமான நிலையத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment