8 பி.ஜே.பி.யின் ‘‘லகான்’’ ஆர்.எஸ்.எஸிடம்தான்
8 மோடியின் நடவடிக்கையால் மோடியைக் கைவிட்ட ஆர்.எஸ்.எஸ்.
8 மோடியின் நடவடிக்கை குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கடும் விமர்சனம்
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பிரதமர் மோடிக்குப் பின்னடைவு, அவரது அளவுக்கு அதிகமான தன்னதிகாரமும், தன்னைக் கடவுள் அவதாரம் என்று தனக்குத்தானே வருணித்துக் கொண்டதும், எதிர்க்கட்சிகளைக் கீழ்த்தரமாக விமர்சித்ததும், ஆர்.எஸ்.எைஸ அனுசரிக்காமல் நடந்துகொண்டதுதான்! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மோடியின் போக்கைக் கடுமையாக விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது; ஆக, மோடிக்கு, பி.ஜே.பிக்கு வெளியுலகில் மட்டுமல்ல, அவர்களின் உள் அமைப்புகளிலும் பலவீனம் ஏற்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். என்ற 1925 இல் புனே உயர்ஜாதிப் பிரிவினரால் தொடங்கப் பெற்ற அமைப்பு – சேவை அமைப்பு என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.
பிறகு அது பல துறைப் பிரிவுகளை ஏற்படுத்தி வந்தது. நேரடி அரசியலில் ஈடுபடுவதை விடுத்து பிறகு அதன் அரசியல் பிரிவாக பாரதீய ஜனதா கட்சியை 1980 இல் நிறுவினர். அதற்குமுன் ஷியாம பிரசாத் முகர்ஜி (இவர் வங்காளப் பார்ப்பனர்) ஜனசங்கம் என்ற பெயரில் இருந்த அமைப்பே, இப்படி 1980 இல் ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவாக ஆகியது (தற்போது சுமார் 36 பிரிவுகள் – பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாகும். அதன் மாணவர் அமைப்புதான் ஏ.பி.வி.பி. என்ற அகில பாரத வித்யா பரிஷத்).
பி.ஜே.பி.யை வழி நடத்துவது ஆர்.எஸ்.எேஸ!
பா.ஜ.க.வுக்குத் தேர்தல் பணிகளைச் செய்யும் தொண்டர்கள் (Cadre) ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்; பா.ஜ.க. அரசியல் கட்சியாக இருந்தாலும், அது ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதல் – கொள்கை முடிவுகள், வழிமுறைகள், ஆட்சித்தலைமை, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யார் யாருக்கு அமைச்சர் பதவி? எந்த எந்த இலாகா? என்பது உள்பட முடிவு செய்வது ஆர்.எஸ்.எஸ்.தான்.
எனவே, பா.ஜ.க.வின் அரசியல் ‘மூக்கணாங்கயிறு’ ஆர்.எஸ்.எஸ். கையில்தான் என்ற நிலை தொடர்ந்தது.
தன்னைக் கடவுள் அவதாரமாக தனக்குத்தானே வருணித்துக் கொண்டவர் மோடி!
பிரதமராக மோடி முதல் முறை முன்மொழியப்பட்டு, கொள்கைத் திட்டங்களும் ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி வந்தன. ஆனால், இரண்டாவது முறை வந்த பிறகு, தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ்., அதன் தலைவர் மோகன் பாகவத் போன்றவர்களால் ஜீரணிக்க முடியாத அளவுக்கு, தன்னை ஒரு ‘‘சேவகனாக’’ முதலில் அறிமுகப்படுத்திக் கொண்ட நரேந்திர மோடி அவர்கள், பிறகு ‘சவுக்கிதாராகி’ பல நிலைகள், பட்டங்களை உருவாக்கி, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் என்று பொதுவாக அழைக்கப்பட்ட நிலை தாண்டி, ‘‘மோடிக்கீ பரிவார்” என்று தன்னை அழைக்கப்படுவதைப் பெருமையோடு விரும்பி அழைத்ததோடு, மனிதப் பிறப்பாக அல்லாமல், ‘‘கடவுளால் அனுப்பப்பட்ட அவதாரம்” என்ற சுயவர்ணனை வரை சென்றுவிட்டதோடு, 2024 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையே ‘‘மோடிக்கீ கியாரண்டி’‘ என்று இவரையே முன்னிலைப்படுத்திக் கொண்ட நிலை உச்சமாகியது; ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பனிப்போர் உள்ளே முளைத்து, வெளியே பகிரங்கமாகும் நிலை – நாட்டின் ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலிலேயே பிரதிபலித்தது!
மற்றவர்களை அளவுக்கு மீறி தரக்குறைவாக பேசிய மோடி
மோடியை முன்னிறுத்தினாலே 400 இடங்கள் வெற்றி பெற்று, ‘‘அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம்” என்று மோடியின் சுற்றுக்கிரகங்களும், அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர்.
ஒவ்வொரு கட்டத் தேர்தலும் – தமிழ்நாடு தொடங்கி நடந்தவற்றில், எதிர்பார்த்த வெற்றியைவிட, தோல்வி மேகங்கள் திரள ஆரம்பித்துவிட்டன என்பதை தனது உளவுத் துறையாலும், ‘ரோட் ஷோக்கள்’ காட்சியிலும் கண்ட மோடி அவர்கள், ஒரு பிரதமர் பேச்சு என்ற நிலையில் இருந்து கீழிறங்கி, தனிப்பட்ட தாக்குதல்களையும், கடவுள், மத, சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர் வெறுப்பு பிரச்சினையை, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரங்கள் – மரியாதைக் குறைவான பதப் பிரயோகங்களைச் செய்தது இந்தியா கூட்டணி – குறிப்பாக ராகுல், மு.க.ஸ்டாலின், சரத்பவார், நவீன் பட்நாயக் போன்ற, மக்களால் மதிக்கப்படும்
தலைவர்களைப்பற்றி, காங்கிரஸ், காந்தி, நேரு போன்ற நாட்டின் வரலாற்றுத் தலைவர்கள்மீதும் ஆதாரமற்ற பல கருத்துரைகளைப் பேசியதுகுறித்து – மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்களே, அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க. அறுதிப்பெரும்பான்மையைப் பெற முடியாது – முந்தைய இடங்களைவிட 63 இடங்களை இழந்ததோடு, கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி ஆட்சி அமைக்க முடியாத அவலம் ஏற்பட்டதற்கு பிரதமரின் இத்தகைய மரியாதைக்குறைவாக, மற்ற எதிர்க்கட்சியினரை எடுத்தெறிந்து பேசி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதே தோல்விக்கு வழிவகுத்தது என்று பட்டாங்கமாய் அவரது தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.ஏ.) கட்சிகளில் ஒன்றான சிவசேனா (ஷிண்டே பிரிவு) முதலமைச்சரே பேசியிருக்கிறார்! இப்படியெல்லாம் ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வ ஆங்கில ஏடான ‘ஆர்கனைசர்’ ஏட்டில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை, ஒளிவுமறைவின்றி இந்த உண்மைகளைக் கக்கியுள்ளது!
இனி யாரும் ‘‘மோடிக்கீ பரிவார்’’ என்று தங்களை அழைத்துக் கொள்ளவேண்டாம் என்று பிரதமர் மோடியே அறிவிப்புத் தரவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்துபற்றி ‘இந்து’ ஏடு!
இன்றைய (14.6.2024) ஹிந்து ஆங்கில நாளேட்டில், தேர்தல் ஆணையத்தின் மேனாள் உறுப்பினரான அசோக் லாவசா என்பவர், ‘‘The Message in the RSS Chief‘s Speech’‘ – ‘‘ஆர்.எஸ்.எஸ். தலைவரின் உரைமூலம் வெளிப்படும் செய்தி” என்ற தலைப்பில் மோடி அவர்களது தேர்தல் உரைகள்பற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு சரியான விமர்சனமாக வெடித்துள்ளது என்பதை நன்கு விளக்கியுள்ளது. (ஹிந்தியில் மோகன் பாகவத் பேசிய சொற்களை விளக்கி அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது).
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக அமைந்துள்ள அக்கருத்துகளை ஏற்க முடியாது என்பதையும், ‘மரியாதை’ இல்லாத ‘அகங்காரம்’ தெறிக்கும் உரைகள் என்றும்,
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சுபற்றி வெளிவந்த கட்டுரை விளக்கப் பொழிப்புரையாகவே அமைந்துள்ளது.
வெளியே மட்டுமல்ல – உள்ளேயும் பலவீனம்!
இது ஒரு தொடக்கம்தான் – பனிப் பாறையின் முனைதான்! மோடி அதன் அடிக்கட்டுமானத்தை 20 சதவிகித அளவுக்கு இழப்புமூலம் தனக்குத்தானே பலகீனமாக்கிக் கொண்டுள்ளார் என்று கட்டுரையாளர் அசோக் லாவசா குறிப்பிடுகிறார்.
எனவே, பலவீனம் வெளியே மட்டுமல்ல, உள்ளேயும்தான் என்பது நினைவிருக்கட்டும் ஆட்சி நடத்துகையில்!
ஆசிரியர் கி.வீரமணி
சென்னை தலைவர்,
14.6.2024 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment