கழகத் தலைவரின் ‘‘கலைஞர் நூற்றாண்டு’’ நிறைவு நாள் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 2, 2024

கழகத் தலைவரின் ‘‘கலைஞர் நூற்றாண்டு’’ நிறைவு நாள் அறிக்கை

கொள்கையில் சமரசமற்ற போராளி கலைஞரால்
தமிழ்நாடு இந்தியாவிற்கே கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது!
திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம்!

சமரசமற்ற கொள்கைப் போராளியான முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாளில், திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம் என்ற உறுதி எடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முத்தமிழறிஞர் மானமிகு கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் சுய விமர்சனம் செய்த ஓய்வற்ற உழைப்பின் ஒப்பற்ற தலைவர் பல்கலைக் கொள்கலனான நூற்றாண்டு நிறைவு விழா நாயகர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.6.2024).
‘(திருக்)குவளை’யில் பிறந்து குவலயத்தையே தனது புகழ் எல்லையாக்கிக் கொண்ட – எதிர்நீச்சல் போராளியாக – உடலால் மறைந்த பிறகும்கூட, இட ஒதுக்கீட்டுக்காக (தனது உடலை அடக்கம் செய்யும் இடத்துக்காக) நீதிமன்றத்தில் போராடி வென்று, அண்ணாவுக்குப் பக்கத்தில் இடம்பிடித்த அவரது பெருமை வியக்கத்தக்கது!
அவர்தான் அண்ணாவின் ஆட்சியை, அய்யா வழியில் நடத்தி, அகிலமே கவனித்து, பாராட்டும் வகையில், அரசினை நடத்தியதும், அவரது சாதனைகளால் பலன் பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இருக்காது என்பதும் மறுக்க முடியாத உண்மை!

மானமிகு கலைஞரின் சமூகநீதி – சுயமரியாதை – சமத்துவம் – பகுத்தறிவுக் கோட்பாடுகள்!
சமூகநீதி – சுயமரியாதை – சமத்துவம் – பகுத்தறிவு இவையெல்லாம் அவர் தந்தை பெரியார் என்ற நம் அறிவு ஆசானிடமும் – அவர்தம் தலைமகன் அறிஞர் அண்ணாவிடமும், ‘‘ஈரோட்டுக் குருகுலவாசத்திலும்’’ கற்றுக்கொண்டவர் என்பதால், எந்த எதிர்ப்பையும் துச்சமென எண்ணி, துணிவாற்றி, இன்பம் பயக்கும் வினையின்மூலம் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி யினர், சிறுபான்மையினர், மக்கள் தொகையின் சரி பகுதியான மகளிர் – இவர்களுக்கு, புது வாழ்வு அளித்த புரட்சியாளர் ஆவார்!
தந்தை பெரியார் தொலைநோக்கோடு, அறிஞர் அண்ணா வுக்குப் பின் முதலமைச்சராக மானமிகு கலைஞர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று அவருக்கு அன்புக் கட்டளையிட்டதே ஓர் அரிய எடுத்துக்காட்டு!
பிறகு திணிக்கப்பட்ட நெருக்கடி காலத்தின் அடக்குமுறை – இயக்கத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததோ என்று பலரும் கணித்து, அஞ்சிய நேரத்தில், அவரது தலைமைதான் – அவரது ஆட்சியை ஒருமுறை, இருமுறை திட்டமிட்டே இழக்கச் செய்து, கழக முக்கிய பொறுப்பாளர்களையும் கைது செய்து, காராக்கிரகத்தில் அடைத்ததோடு, ஏடுகளில் தணிக்கை என்ற கருத்து சுதந்திரத்திற்கும் கல்லறை கட்ட நினைத்த கோரத்தாண்டவத்தை, அவரது துணிச்சல்தான் வென்று காட்டியது.

சமரசமற்ற அரசியல் நிலைப்பாடு!
சமரசமற்ற அவரது அன்றைய அரசியல் நிலைப்பாடும் – கொள்கைவயப்பட்ட கோணல் இல்லாப் பயணமுமே அதனைத் தக்க வகையில் எதிர்கொண்டது; வென்று நின்றது!
“மற்றொரு பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” என்று கூர்த்த மதியோடு அண்ணா சொன்னதும் உண்மை யாயிற்று!
சாதனை சரித்திர நாயகராக, காலத்தை வென்று கடமையாற்றிய கலைஞரின் புகழ் என்றும் குன்றின்மேல் ஒளிவிளக்காக ஓங்கிப் பிரகாசிக்கிறது!

திராவிடத்தின் தேவையும் – பயணமும்!
அவர் ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ என்பதற்கேற்ப, சாதனையாளராக, இன்றைய ஆளுமைமிக்க அடக்கம் நிறை முதலமைச்சராக மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற உழைப்பின் ஊற்றை அடையாளம் காட்டிச் சென்றதால், தமிழ்நாடு இந்தியாவிற்குக் கற்றிடமாகி – கலங்கரை வெளிச்சமாக – வழிகாட்டுகிறது!
எனவே, திராவிடத்தின் தேவையையும், புகழையும் திக்கெட்டும் பரப்பிட உறுதி ஏற்போம்!
பயணங்கள் தொடரட்டும்!
பயன்கள் குவியட்டும்!

சென்னை தலைவர்,
2.6.2024 திராவிடர் கழகம்

No comments:

Post a Comment