நினைத்ததை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை பலர் நிரூபித்திருந்தாலும் பாலினமும் இதற்கு ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் மும்பையைச் சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காம்யா கார்த்திகேயன். 17 வயதான காம்யா உலக நாடுகள் அனைத்தும் திரும்பிப் பார்க்கும் வகையில் சிறுவயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, இளம்பெண் சாதனையாளர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
‘‘மூன்று வயதில் இருந்தே நான் ட்ரெக்கிங் (மலையேற்றம்) செய்ய துவங்கிட்டேன். அதற்கு காரணம் அப்பாதான். அவரின் வேலை காரணமாக நாங்க லோனாவாலாவில் வசித்து வந்தோம். அவர் ட்ரெக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் ஆண்டில் பாதி மாதங்கள் அப்பா எங்களுடன் இருக்கமாட்டார். அது குறித்து அம்மாவிடம் கேட்டதற்கு என்னையும் அப்பாவுடன் மலைப்பாதையில் நடக்க அனுப்பி வைத்து அதற்கான பதிலை எனக்கு தெளிவு படுத்தினார்.
‘‘முதல் மலை ஏறிய பிறகு அடுத்தடுத்த உயரத்திற்கு போக வேண்டும் என்று தோன்றியது. அப்போது முடிவு செய்தேன். 7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்கள் மற்றும் வட தென் துருவங்களில் உள்ள பனிச்சறுக்குகளில் பயணிக்க வேண்டும் என்று. அந்த சவாலுக்கு ‘வலிமை சவால்’ என்று பெயர் வைத்தேன். என் முதல் சவால் அக்டோபர் 2017இல் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை. இந்த மலையை ஏற ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். காரணம், பச்சை புல்வெளியை தொடர்ந்து பாலைவனம் அடுத்து பனி என இதன் நிலப்பரப்பு.
‘‘ஒவ்வொரு மலையும் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. நம் தேவையினை பார்த்துக்கொள்ள வேண்டும். சரியான படுக்கை இருக்காது. தொழில்நுட்பம் வேலை செய்யாது. இருக்கும் எரிவாயுவை பயன்படுத்தி சமைக்க வேண்டும். அதனால் இமாலய மலை ஏறுவதற்கு முன் சைக்கிளிங், நடைப்பயிற்சி, ரன்னிங் மற்றும் எங்க 21 அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டுகளில் கையில் பையுடன் ஏறி இறங்குவேன். உடற்பயிற்சியை விட மனதளவில் நம்மை தயார்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.
No comments:
Post a Comment