திருவனந்தபுரம், ஜூன் 16- ‘நீட்’ தேர்வு என்பது ஆங்கில வழி, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் சாதகமாக இருக்கிறது.
ஏழை மாணவர்களின் மருத்துவ உரிமையை முற்றிலும் இந்த முறை மறுக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வுத்தாள் ‘லீக்’ ஆனது என்ற குற்றச்சாட்டிலிருந்து மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றார்கள். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 67 மாணவர்கள் எப்படி முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து கூட்டி கழித்து பார்த்தாலும் எடுக்க முடியாத 718 மற்றும் 719 போன்ற மதிப்பெண்களை ஏராளமானோர் பெற்றிருந்தனர். இது தொடர்பாக மாணவர்கள் கேள்வி எழுப்பியபோதுதான், கடந்த முறை சில மய்யங்களில் மாணவர்கள் தேர்வு எழுத சுமார் 30 நிமிடங்கள் வரை காலதாமதம் ஆனது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது என தேசிய தேர்தல் முகமை (NTA) தெரிவித்தது. இதனால் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான திமுக நிலைப்பாட்டை இந்த முடிவு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. நுழைவுத் தேர்வு சமூக நீதி மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது என்று மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு சொல்வது தான் சரி என்று கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,
“நீட் தேர்வு என்பது ஆங்கில வழி, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் சாதகமாக இருக்கும் ஒரு முறை என தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. உள்ளூர் நடுத்தர பள்ளிகளில் படித்து வரும் ஏழை மாணவர்களின் மருத்துவ உரிமையை முற்றிலும் இந்த முறை மறுக்கிறது. 2017-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு எழுப்பி வரும் குரல் இதுதான். இதே போன்ற புள்ளிவிவரங்கள் மற்ற மாநிலங்களில் இருந்தும் சேகரிக்கப்பட வேண்டும்” என்று கேரள காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment