மோடியின் பாசாங்குகளை தமிழ்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்தனர்! காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 10, 2024

மோடியின் பாசாங்குகளை தமிழ்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்தனர்! காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

featured image

புதுடில்லி, ஜூன் 10 மோடியின் செங்கோல் நாடகம் முடிவுக்கு வந்திருக்கிறது, தமிழ்நாட்டு வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் மோடி புதிய நாடா ளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த நாள்.

மோடி ஒரு பேரரசர் என்று நியாயப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தமிழ் வாக்காளர்களை ஈர்க்கவும், 15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வரலாறு திரிக்கப்பட்டது.
அந்த நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும். செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது. ஆனால், தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்.” என விமர்சித்துள்ளார்.

முன்னதாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்த ஜெய்ராம் ரமேஷ், “இந்தியாவில் உள்ள பிரதமர்களில் ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து 3 ஆவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கப் போவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வரு கிறது. ஒரு கட்சியை வழிநடத்தி 240 இடங்களில் வெற்றி பெறச் செய்வது மட்டும், ஒரு பிரதமரின் வேலையல்ல.
அதே நேரத்தில் மேனாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடர்ச்சி யாக 1952 ஆம் ஆண்டில் 364 இடங்களிலும், 1957 ஆம் ஆண்டு 371 இடங்களிலும், 1962 ஆம் ஆண்டில் 361 இடங்களிலும் வெற்றிபெற்றார். போட்டியிட்ட அனைத்து முறையும் மூன்றில் இரண்டு பங்கு தனிப் பெரும்பான்மையுடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தார். ஆயினும் அவர் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும், நாடாளுமன்றத்தை மிகவும் கவனமாக, நிலையான இருப்பில் வைத்திருப்பவராகவும் இருந்தார்.

நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமாக பதவியேற்கப் போகும் ஒரே மனிதர் மோடி மட்டு மல்ல. நேருவைத் தொடந்து இந்திரா காந்தி, 1966, 1967, 1971 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் 4 முறை பிரதமராகவும், அடல் பிகாரி வாஜ்பாய், 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பிரதமராகவும் பதவியேற்றனர். பிரதமர் மோடியின் இந்த பரிதாபகரமான தேர்தல் நிலையை நியாயப்படுத்த என்ன வேண்டுமானலும் சொல்லி அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளவார்கள்’’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீ னத்தால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டபோது செங்கோல் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீ னங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அங்கே அழைத்துச் செல்லப்பட்டனர். நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் அளிக்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றத்திலும் நிறுவப்பட்டது. இதன் மூலம், தமிழ் அடையாளத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாக பாஜக வினர் கூறினர்.
எனினும், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment