சென்னை, ஜூன் 6- பகுத்தறிவாளர் கழகம் 2.06.2024 அன்று பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புக் கூட்டம் நடத்தப்பெற்றது.
அக்கூட்டத்தில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவருமாகிய முனைவர் நா.சுலோசனா, நூற்றாண்டு கண்ட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரையுலகப் பங்களிப்புக் குறித்து எழுதிய ’திரைவானில் கலைஞர்’ என்னும் ஆய்வு நூலின் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவுக்கு வருகைபுரிந்த அனைவ ரையும் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் வேண்மாள் நன்னன் வரவேற்றுப் பேசும்பொழுது தனது தந்தை புலவர் நன்னன் அவர்களுக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பு குறித்து சுவைபட எடுத்துரைத்தார்.
சமூகப் பணியையும் திருக்குறள் பரப்பும் பணியையும் இரண்டு கண்களாகப் போற்றும் விஜிபி குழுமம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்கள் தமது வாழ்த்துரையில் உலக நாடுகளில்லாம் 163 திருவள்ளுவர் சிலைகளைத் தமது அமைப்பு மூலமாக நிறுவியுள்ள செய்தியையும் அடுத்த மாதம் இலங்கையில் சிலை நிறுவ இருக்கும் செய்தியையும் தெரிவித்தார். தமிழ் என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவர் கலைஞர் தான். ’திரைவானில் கலைஞர்’ என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் சுலோசனா அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். மேலும் பெரியார் திடலுக்கும் தமக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் பகுத்தறிவாளர் கழகம் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டது என்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் ’திரைவானில் கலைஞர்’ என்ற நூல் அறிமுக விழா நடத்துவதற்கு பகுத்தறிவாளர் கழகத்திற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தார்.
கலைஞரின் திரை வாழ்க்கையில் அவர் எழுதிய உரையாடல்கள், பாடல்கள், சமுதாயச் சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகள் என்று அனைத்தையும் உள்ளடக்கிய வரலாற்றுப் பெட்டகமாக இந்நூல் அமைந்துள்ளது என்று நூலாசிரியரைப் பாராட்டினார்.
கிணற்றுத் தவளை பற்றி ஒரு சிறிய கதையுடன் தன் உரையைத் தொடங்கிய திரைப்பட இயக்குநர் வி.சி.குகநாதன் ’திரைவானில் கலைஞர்’ என்ற நூலைப் படித்தபோது தாம் ஒரு கிணற்றுத் தவளை தான் என்று உணர்ந்தவராகக் கூறினார். நூலாசிரியர் ஒரு கடல் தவளை என்று பாராட்டினார்.
கலைஞரின் ஒவ்வொரு படத்தின் கதையையும் இரண்டு வரிகளில் மிகச் சிறப்பாக உணர்த்தியிருக்கிறார். உரையாடல், பாடல் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இது நூல் மட்டுமல்ல ஒரு களஞ்சியம். இப்படிப்பட்ட மிகச்சிறந்த எழுத்துகளைத் தந்த கலைஞருக்குப் பேனா நினைவுச் சின்னத்தைக் கடலில் மட்டுமல்ல கைலாசத்தில் கூட வைப்போம் என்று சுவைப்பட கூறினார்.
சமூக நீதி பாதுகாப்புக் கழகத்தின் பொதுச் செயலாளரும் மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான இரா.முத்துராஜா, கவுரா குழுமத் தலைவர் ராஜசேகர் போன்றோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பேராசிரியர் சுலோசனா எழுதிய ’திரைவானில் கலைஞர்’ நூல் ஒரு களஞ்சியம் என்று கூறிய திராவிட இயக்க ஆய்வாளர் வி.மா.ச.சுபகுணராஜன் தமது சிறப்புரையில் தாம் முரசொலியில் கலைஞரின் 46 படங்களைப் பற்றிய ஆய்வுரைத் தொடராக எழுதியதையும் அது நூலாக வெளிவந்ததையும் நினைவு கூர்ந்தார். இந்த நூலைப் படிக்கும் போதுதான் அதன் பிறகு பல சிறந்த படங்கள் வந்துள்ளன என்பதை உணர முடிகிறது என்று கூறினார்.
இந்நூலில் கலைஞரின் திரைப்பட நுழைவு, திரைக்கதைத் தேர்வு, தலைப்புப் பொருத்தம், திரைக்கதை வசன ஆசிரியர், பாடலாசிரியர், பின்னைப் புதுமை, சமூக மறுமலர்ச்சி, கன்னித் தமிழ் காத்த கலைஞர் என்று எட்டுத் தலைப்புகளில் வகைப்படுத்தி அலசி ஆராய்ந்து கலைஞர் திரையுலகிற்கு ஆற்றியுள்ள பங்களிப்புக் குறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டி எழுதியுள்ளார். தகவல்கள் மட்டுமல்லாமல் அந்த தகவல்கள் சொல்லும் செய்தி என்ன என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும் கலைஞரின் ஒவ்வொரு படத்தைப் பற்றியும் ஒரு ஆய்வு நூல் எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் ஒரு மாபெரும் தலைவர். அவர் ஒரு பெருவெடிப்பு. அவருடைய கருத்துகளைக் களத்துக்குக் கொண்டு செல்ல ஒரு தொண்டன் வேண்டும் அப்போதுதான் அது பேரியக்கமாக வளரும். கலைஞரின் எல்லா சாதனைகளும் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் காணிக்கை ஆக்கப்பட்டன. ’அம்பாள் எந்த காலத்தில் பேசினாள்?’ என்று கலைஞர் எழுதியவுடன் திருவிளையாடல் புராணம் போன்ற பக்தி படங்களில் சாமிகள் எல்லாம் தமிழ் பேசத் தொடங்கி விட்டன என்று சுவைப்படப் பேசினார்.
அவர் விரும்பியிருந்தால் சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் விளங்கியிருப்பார். கண்ணகி திரைப்படம் 1943-44 ஆண்டுகளில் வெளிவந்தது. நாடக வடிவமாக எடுத்துத் திரைப்படமாக மாற்றினார்கள். சதுராட்டம் என்பதைத் தேவிடியாள் கச்சேரி என்றே குறிப்பிட்டார்கள். ஆனால், பண்பாடு கெடாமல் கலைஞர் சிலப்பதிகாரத்தை ஒட்டி பூம்புகார் படத்திற்குத் திரைக்கதை அமைத்தார். பராசக்தியில் பகுத்தறிவு நிறைந்த சிந்திக்கும் பெண் பாத்திரம், சாக்ரடீசைக் கிரேக்கத்துப் பெரியாரே என்று குறிப்பிடும் வசனங்கள் கலைஞர் யார் என்பதைக் காட்டுகிறது. இப்படிப் பல புரட்சிகளைச் செய்தவர்தான் கலைஞர் என்று கூறினார் சுபகுணராஜன்.
ஏற்புரை வழங்கிய பேராசிரியர் நா. சுலோசனா தான் சிற்றூரில் பிறந்து இணை ஏற்புக்குப் பிறகு பகுத்தறிவுப் பாதைக்கு மாறிய வரலாற்றையும், கலைஞரின் அனைத்துத் திரைப்படங்களையும் தான் பார்த்தும் கேட்டும், வசனங்களைப் படித்தும், திரைக்கதை எழுதப்பட்ட சூழல், தந்தை பெரியாரின் கருத்தியல்க ளைச் சமூகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் கொள்கை பரப்புக் கருவி யாகத் திரைப்படங்களைக் கலைஞர் கையாண்ட தன்மைகளையும் இந்நூலை எழுதும் பொழுது தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
வருகை புரிந்துச் சிறப்பித்த அனைவருக்கும் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றி தெரிவித்தார். உதவிப் பேராசிரியர் ச.ஆசைக்கண்ணு மிகச் சிறப்பாக இணைப்புரையை வழங்கினார். திராவிட இயக்கக் கருத்தியல்களைக் கொண்ட தோழர்கள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment