நீட் தேர்வில் குளறுபடி? மாணவர்கள் தொடர் போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 10, 2024

நீட் தேர்வில் குளறுபடி? மாணவர்கள் தொடர் போராட்டம்!

featured image

மும்பை, ஜூன் 10- நீட் தேர்வு மதிப்பெண் முறையில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு தொடங்குவதற்கு முன்பாக இத் தேர்வு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. நீட் வினா தாளை சில மாணவர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று வெளியானதில் கூட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தேர்வு மய்யத்தில் தேர்வெழுதிய 6 பேர் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது. ‘நீட் தேர்வில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது’ என்று சில மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

தேர்வு மய்யங்களில் ஏற்பட்ட காலதாமத்திற்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்தும், மறு தேர்வு நடத்தக்கோரியும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதி களிலும் மாணவர்கள் ஆர்ப்பட்டம் நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அணியான ‘இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு(எஸ் எஃப் அய்)’ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், முறைகேடுகள் தொடர்பான உரிய விசாரணை நடத்தவும் வலியுறுத்தி 8.6.2024 அன்று சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின்(அய் எம் ஏ) இளநிலை மருத்துவர்கள் அமைப்பினர், இவ்விவகாரத்தில் சிபிஅய் விசாரணை நடத்தக்கோரி வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், ’கருணை அடிப்படையிலான மதிப்பெண்கள்’ என்ற புது விதிமுறையை தேசிய தேர்வு முகமை இந்த முறை நீட் தேர்வில் கையாண்டிருப்பது ஏன்? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, நிகழாண்டு நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீட் தேர்வு குளறு படிகள் தொடர்பாக உச்சநீதிமன்ற கண் காணிப்பின் கீழ் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். நாடு முழுவ தும் நீட் தேர்வில் எந்த சமரசமும் செய் யப்படவில்லை. அந்த குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment