காற்றாலைப் பறவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

காற்றாலைப் பறவை

featured image

உலகம் முழுவதும் அதிகம் காற்றடிக்கும் பகுதிகளில் காற்றாலை வாயிலாக மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காற்றாலையின் இறக்கைகளின் வடிவ மைப்பில் சிறிய மாறுதல் செய்வதன் வாயிலாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்புக்கு உதவியது ஒரு பறவை என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உலகின் மிகப் பெரிய பறவைகளில் ஒன்று ஆண்டியன் காண்டார். இதன் சிறகுகள் 10 முதல் 12 அடி வரை இருக்கும். 16 கிலோ எடை கொண்ட இவற்றால், ஒரு நாளைக்கு 240 கி.மீ., துாரத்தை இறக்கைகளை அடிக்காமலேயே பறக்க முடியும். இதற்குக் காரணம் இறக்கைகளின் வடிவமைப்பு.

கனடா நாட்டைச் சேர்ந்த அல்பெர்டா பல்கலை விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், இந்தப் பறவைகளின் இறகுகளில் உள்ள சிறிய முனைகள் (துணை இறகு அமைப்பு) தான் காற்றின் வேகத்தைச் சமாளித்துப் பறக்க உதவுகின்றன என்ற முடிவுக்கு வந்தனர். இதை உறுதிப்படுத்த 17.6 அடி நீளமான இறக்கை கொண்ட புதிய காற்றாலையை வடிவமைத்தனர். இதன் முனைகள் கூர்மையாக வளைந்திருக்கும் படியாகச் சிறிய மாற்றம் செய்தனர். இதைச் சோதித்துப் பார்த்தபோது வழக்கத்தை விட இந்தப் புதிய காற்றாலை 10 சதவீதம் அதிக மின்சார உற்பத்தி செய்வதை உறுதி செய்தனர். காற்றாலை இறக்கைகள் சுற்றும்போது ஏற்படும் காற்றழுத்த வேறுபாடுகளைச் சமாளிக்க இந்தக் கூர்முனை உதவுகிறது. இதனால், காற்றுடனான உராய்வு குறைந்து சுற்றும் வேகம் அதிகரிக்கிறது. விரைவில் இந்தப் புதிய வடிவமைப்பு பயன்பாட்டிற்கு வருமெனத் தெரிகிறது.

No comments:

Post a Comment