கோடநாடு எஸ்டேட்டை ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்யலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

கோடநாடு எஸ்டேட்டை ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்யலாம்

featured image

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை, ஜூன் 8- கோடநாடு எஸ்டேட்டை ஊராட்சி. மன்ற நிர்வாகம் ஆய்வு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் அனுமதியின்றி கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதால் அதற்கு உரிய வரி செலுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க வலியுறுத்தியும் கோடநாடு ஊராட்சி மன்றத்தின் அப்போதைய தலைவரான பொன் தோஸ் கடந்த 2007ஆம் ஆண்டு தாக்கீது பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊராட்சி மன்றத்தலைவர் பிறப்பித்த தாக்கீதை ரத்து செய்து கடந்த 2008ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பொன் தோஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம்,சி.குமரப்பன் ஆகியோர் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கோடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்கப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து அந்த எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை உள்ளது.
சட்டவிரோதமாக கூடுதல் கட்டு மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டி ருந்தால் என்ன செய்வது? ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்புதெரிவித்து சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தற்போதைய நிலவரம் என்ன என்பதை ஆய்வு செய்தால்தானே விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா, இல்லையா? என்பது தெரியும். ஆய்வு செய்வதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு மூத்த வழக்குரைஞர், ‘அரசியல் பழிவாங்கும் நட வடிக்கை யாக, கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரே ஆய்வு என்ற பெயரில் பங்களாவுக்குள் நுழைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “கோடநாடு எஸ்டேட்டை முழுமை யாக ஆய்வு செய்யவும்,சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது. உரிய விதிமுறை களைப் பின்பற்றி ஊராட்சி மன்ற நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ளலாம். இதற்கு அனுமதி அளிக்கிறோம். அதேநேரம், ஆய்வின்போது அதிகாரிகள் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். அங்கு இருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment