முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி கோவை சுப்புவின் ஒளிப்படக் கண்காட்சி தலைசிறந்த ஓவியம் – காவியம் – இலக்கியம் கலைஞர் மறையவில்லை, நம்முடன் நிறைந்திருக்கிறார் ; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்! தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 3, 2024

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி கோவை சுப்புவின் ஒளிப்படக் கண்காட்சி தலைசிறந்த ஓவியம் – காவியம் – இலக்கியம் கலைஞர் மறையவில்லை, நம்முடன் நிறைந்திருக்கிறார் ; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்! தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

featured image

சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் மறையவில்லை, நம்முடன் நிறைந்திருக்கிறார்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (2.6.2024) முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் – ஒளிப்பட நிபுணர் கோவை சுப்பு அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்டிருந்த ஒளிப்படக் கண்காட்சியை தமிழர் தலைவர் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு:

நாம் கலைஞரோடு
ஒன்றிப் போயிருக்கிறோம்!

காலத்தை வென்ற கலைஞரின் நூற்றாண்டு நிறைவடைந்து, அடுத்தாண்டு தொடங்குகின்ற இந்த அற்புதமான வேளையில், அவருடைய பல்வேறு நிகழ்ச்சிகளையெல்லாம் படத் தொகுப்புகளாக ஆக்கி, கலைஞர் நம்மோடு என்றைக்கும் வாழ்கிறார்; நாம் கலைஞரோடு ஒன்றிப்போயிருக்கிறோம் என்கிற ஒருவிதமான உவகை கலந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறார், ஆற்றல் வாய்ந்த ஒளிப்பட நிபுணர் கோவை சுப்பு அவர்கள்.

ஒரு தேனீ, பல மலர்களிலிருந்து விடாமல் தேனைத் திரட்டித் தருவதுபோல் இந்தத் தேனை மக்கள் அருந்தும்படியாக நமக்குத் தந்திருக்கின்றார். எனவே, தேனினும் இனிய அவருடைய அற்புதமான இந்த முயற்சி பாராட்டத்தகுந்தது. அவரிடம் நான் ஒரு கருத்தைச் சொன்னேன்.

இவ்வளவு சிறப்பான தொகுப்புகள் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கிறது என்றால், கலைஞருடைய பல பரிமாண வாழ்க்கையை அது காட்டுகிறது.

கடும் உழைப்பு, விடா முயற்சி, கொள்கை யில் கொஞ்சம்கூட சமரசமில்லாமல் பல வகையான போராட்டங்கள் – போராட்டமே வாழ்க்கை என்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ஒரு தலைவர் – எந்த நிலைக்கு உயர்ந்திருக்கின்றார். ஓர் எளிய குடும்பத்தி்ல், ஓர் எளிய கிராமத்தி்ல, திருக்குவளையில் பிறந்து, குவலயத்தையே அவர் தன்னுடைய உலகமாக ஆக்கியிருக்கிறார்.

ஒரு தலைசிறந்த காவியம்
ஓவியம் – இலக்கியம்!

அப்படிப்பட்ட அரும் சாதனைகளை வெறும் வார்த்தைகளால் சொல்வதைவிட, எழுத்துக்களால் கோர்ப்பதைவிட, படத் தொகுப்புகளாக இப்படி அளித்திருப்பது ஒரு தலைசிறந்த காவியம் – ஓவியம் – இலக்கியம்!

வாழ்க, வளர்க! இப்படிப்பட்ட பல முயற்சி களை கோவை சுப்பு அவர்கள் செய்ய வேண்டும்.

கலைஞர் மறையவில்லை,
நம்முடன் நிறைந்திருக்கிறார்;
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்!

எந்தத் தலைவர்களுக்கும் கிட்டாத வாய்ப்பு, கலைஞருக்குக் கிடைத்திருக்கிறது. காரணம், கலைஞர் அவர்கள் – யாரும் எட்ட முடியாத இடத்திற்கு தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவராக, பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பியாக, ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் அண்ணனாக – கலைஞர் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், பசுமை நினைவுகளை என்றென்றைக்கும் நினைவூட்டி, கலைஞர் மறையவில்லை, நம்முடன் நிறைந்திருக்கிறார்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதற்கு இதைவிட பெரிய ஆவணம் வேறு இருக்க முடியாது.

வாழ்த்துகள்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment