‘திராவிட பூமி தான் தமிழ்நாடு’ தேர்தல் முடிவு உணர்த்துகிறது : வைகோ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

‘திராவிட பூமி தான் தமிழ்நாடு’ தேர்தல் முடிவு உணர்த்துகிறது : வைகோ

featured image

சென்னை, ஜூன் 6- மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்க ளவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

நடைபெற்று முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில், இந்தியத் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் பாசிச அரசு நடத்திய பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று ஆணவமும் அதிகாரத் திமிரும் கொப்பளிக்க தேர்தல் பரப்புரைகளில் மதவெறி ஊட்டி எதேச்சதிகாரப் போக்குடன் நடந்துகொண்டவர்களுக்கு மக்கள் சக்தி என்றால் என்ன என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தி உள்ளது.

ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம் என்று ஒற்றை இந்துத்துவ தேசியவாதத்தை நிலைநிறுத்த முயன்றவர்களுக்கு 18ஆவது மக்களவைத் தேர்தலில் சரியான அடி விழுந்திருக்கிறது.

பா.ஜ.க.வின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைந்த இந்தியா கூட்டணி இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

பத்தாண்டு கால நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கி றார்கள். எனவே, மோடி அவர்கள் பிரதமர் பதவியில் நீடிக்கின்ற தார்மீக உரிமையை இழந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்துகின்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்த இந்தியா கூட்டணி, அவர் பிரகடனம் செய்தவாறு 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி தமிழ்நாடு திரா விட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது.

ஹிந்துத்துவ மதவெறி பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கும் மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட திருச்சி தொகுதியில் மூன்று இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் உழைத்த தி.மு.கழகத்தின் ஆற்றல் மிக்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னோடிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment