கலைஞர் நூற்றாண்டு நிறைவு நாளில் அவர்தம் மகளிர் வளர்ச்சித் திட்டங்களை நினைவு கூர்வோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 3, 2024

கலைஞர் நூற்றாண்டு நிறைவு நாளில் அவர்தம் மகளிர் வளர்ச்சித் திட்டங்களை நினைவு கூர்வோம்!

featured image

தந்தை பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் முக்கியமானவை. அந்த வகையில் மகளிர் உரிமை வளர்ச்சித் திட்டங்களை முத்தமிழ் அறிஞரின் சாதனைகளை அவர்தம் நூற்றாண்டு நிறைவு நாளில் நினைவு கூர்வோம்!

பெண்கள் பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கிடும் வகையில் திமுக ஆட்சியில் 1990-ஆம் ஆண்டிலிருந்து அரசு பதவிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆணை பிறப்பித்தார்.

பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை முற்றிலும் பெண்களையே ஆசிரியைகளாக நியமிக்க வேண்டும், என 1997-இல் கலைஞர் ஆணையிட்டார்.
1973 முதல் இந்தியாவிலேயே முதன்முறையாக கலைஞர் ஆட்சியில் தான் காவல்துறையில் மகளிரை பணிநியமனம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆணையிட்டார். தற்போது 56 விழுக்காடாக செயல்படுத்தப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாட்டில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது போல நாடாளுமன்றத்திலும் மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தலாம். என கலைஞர் ஆலோசனை கூறினார்.

தந்தை பெரியார் அவர்கள் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு அளிக்க வேண்டும் என்று இந்தியாவிலேயே முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றினார் என்பதை கருத்தில் கொண்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகு 1990-இல் பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சம உரிமை அளித்திடும் சொத்துரிமை சட்டம் வழங்கி சரித்திரம் படைத்தார் கலைஞர்.

திமுக ஆட்சியில் 1989-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து உட்கொள்ள வும், வேலைக்குச் செல்ல முடியாததால் ஏற்படும் வருவாய் இழப்பினை சரிகட்டவும் 6000 ரூபாய் உதவி வழங்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் மட்டும் 25 லட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டங்கள்.

தி.மு.க. ஆட்சியில் 1990-ஆம் ஆண்டு 8-ஆம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.5000/- வழங்கும் திருமண நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டது.

1996-ஆம் ஆண்டு முதல் 10ஆவது படித்த ஏழைப் பெண்களுக்கும் வழங்கலாம் என திட்டத்தை நீட்டித்து திருமண நிதி உதவியையும் ரூ.5000/-லிருந்து ரூ.10000/-ஆக உயர்த்தி கலைஞர் ஆணையிட்டார். இந்த திருமண நிதி உதவிதான் 2006 முதல் 15,000 ரூபாய் என்றும், 2010 முதல் 20,000 ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டது.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதி உதவி திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு ஜாதி மறுப்புத் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், இவைகளின் மூலம் இலட்சக்கணக்கான ஏழை மகளிர் கலைஞர் ஆட்சியில் பயனடைந்தனர்.

விதவைப் பெண்களுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் முதியோர் உதவி திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கி 1988-இல் ஆணையிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12,940 ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
கலைஞர் ஆட்சியில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம்.

ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள பெற்றோரில் எவரேனும் ஒருவர் 35 வயதுக்கு முன்னதாக குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் குழந்தை பெயரில் 22,000 ரூபாய் வைப்புத் தொகையும், இரு பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் 15,000 ரூபாய் வைப்புத் தொகையும் தி.மு.க. அரசால் வழங்கப்பட்டது.

கைவிடப்பட்ட ஆதரவற்ற அனாதை குழந்தைகளை தத்தெடுத்து பராமரிக்கும் திட்டத்தையும் கலைஞர் அரசுதான் கொண்டு வந்தது.
2006 தி.மு.க. ஆட்சியில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச தரிசு நிலங்கள் வழங்குவதென முடிவு செய்தபோது, கலைஞர் அவர்கள் அந்த நிலங்களை அந்தந்த குடும்பத்தின் பெண்கள் பெயரில் வழங்கி பெண்களுக்கு குடும்பத்தில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
1998 மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பூ விற்கும் மகளிர், காய்கறி விற்கும் மகளிர் உள்பட பல்வேறு சிறு வணிகங்களில் ஈடுபட்ட ஏழை மகளிரின் பொருளாதார நலன்களை தி.மு.க. ஆட்சி மேம்படுத்தியது.

கலைஞர் ஆட்சியில் திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம் பெற வேண்டும். என சட்டம் கொண்டு வரப்பட்டது.
கலைஞர் ஆட்சியில் பெண்களே நடத்தும் நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டன.
தி.மு.க. ஆட்சியில் அரசின் தொழில் மனைகள் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 10 விழுக்காடு மனைகளை ஒதுக்கிட வகை செய்து பெண்களை தொழில் முனைவோராக்கிட ஊக்கம் தரப்பட்டது.

பெண்கள் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் சொந்தக் காலில் நிற்க வேண்டும். என்பதற்காக 1989-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் ஆதகம்பாடி எனும் ஊருக்கருகில் உள்ள காட்டுக் கொட்டகை எனுமிடத்தில் மாரியம்மன் மகளிர் மன்றம் எனும் பெயரில் குப்பம்மாள் என்பவரைத் தலைவராகவும், ஜெயலட்சுமியைத் துணைத் தலைவராகவும் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை முதன் முதலாக 23.7.1990 அன்று தொடங்கி வைத்தார் என்பது வரலாறு.

தி.மு.க. ஆட்சியில் 1997-இல் 1998-இல் 14 மாவட்டங்களிலும், 1998-1999இல் 7 மாவட்டங்களிலும் 1999-2000-இல் 7 மாவட்டங்களிலும், என சென்னை நீங்கலாக 28 மாவட்டங்களில் செயல்படத் தொடங்கி 31.12.2010 வரை 75,66,497 மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு 488970 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இவர்களின் மொத்த சேமிப்பு 2698 கோடி ரூபாய். இவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

30.9.2010 அன்றைய அளவில் சுய உதவிக் குழுக்களுக்கு 96 கோடியே 50 லட்ச ரூபாய் சுழல்நிதி மானியமாக வழங்கப்பட்டது.
2006-2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 5 ஆயிரம் 7 ஆயிரம் பேராக இருந்தாலும், பல மணி நேரம் நின்று கொண்டே அவர்களுக்கு தன் கையாலேயே நிதி உதவி,சுழல் நிதி வழங்கினார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காகவே மாவட்டங்கள் தோறும் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. மாநில அளவில் நிரந்தர சந்தைக்காக வள்ளுவர் கோட்டம் அருகில் 10 கோடி ரூபாய் செலவில் நவீன பலமாடி மாளிகை ஒன்றைக் கட்டி அந்த கட்டடத்திற்கு கலைஞர் அவர்கள் அன்னை தெரசா மகளிர் வளாகம் என பெயரிட்டு திறந்து வைத்தார்.

மகளிர் சுய உதவி குழு ஏழை விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி செயல்படுத்தியவர் கலைஞர்.

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் நூற்றாண்டு நிறைவு – பிறந்த நாளில் இவற்றை எல்லாம் நினைவு கூர்வோம். இதனைப் பின் தொடர்ந்துதான் “திராவிட மாடல்” ஆட்சி நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க ஸ்டாலின் தலைமையில் மேலும் மகளிருக்கான உதவித் திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment