ஊன்றிப்படித்து, ஓரணியில் திரளுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

ஊன்றிப்படித்து, ஓரணியில் திரளுங்கள்!

featured image
*  குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 
  ‘நீட்’ டை எதிர்த்த மோடி, இன்று திணிப்பது ஏன்?
* ‘நீட்’ என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி!
‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்!
ஒன்றிணைந்து போராடுவோம், வாரீர் தோழர்காள்!!
ஜூன் 15 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 
அனைத்துக் கட்சிகள், தலைவர்கள் பங்கேற்கும்  போராட்டம்! 
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

சமூகநீதியைச் சாகடிக்கும் ‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்! ஒன்றிணைந்து போராடுவோம் – வாரீர் தோழர்களே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1. ‘நீட்’டுக்கு ஆதரவு அளித்ததா தி.மு.க.?
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்த போதுதான் ‘நீட்’ கொண்டு வரப்பட்டது என்று அரசியல் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதுண்டு.

உண்மையில் நடந்தது என்ன?
2.12.2010 அன்று காங்கிரஸ் ஆட்சியில் ‘நீட்’ சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தக் கட்டத்திலேயே தி.மு.க. அதனை எதிர்த்தது. ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு ‘நீட்’டைக் கைவிடுமாறு வலியுறுத்தியதோடு அமைதி காக்கவில்லை தி.மு.க.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கையும் தொடுத்தது. நீதிபதி திரு.ஜோதிமணி அவர்கள் ‘நீட்’டுக்குத் தடையும் விதித்தார்.
‘நீட்’டை எதிர்த்து 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எல்லா வழக்குகளையும் ஒன்றிணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.
நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையில் அமைந்த அந்த அமர்வில் நீதிபதிகள் விக்ரமஜித் சிங், ஏ.ஆர்.தவே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஏ.ஆர்.தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மற்ற இரு நீதிபதிகளும் ‘நீட்’ சட்டம் செல்லாது என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 25, 26, 29, 30 பிரிவுகளின்படி மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் உரிமை கிடையாது என்றும் திட்டவட்டமாகத் தீர்ப்பு அளித்தனர் (18.7.2013).

அத்தோடு ‘நீட்’ சட்டத்தின் கதை முடிந்து போயிற்று. ஆனால், நடந்தது என்ன?
2014 இல் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் உச்சநீதிமன்றத்தில் அந்தப் பெரும்பான்மை தீர்ப்பின்மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் விரும்பத்தகாத விசித்திரம் என்னவென்றால், எந்த நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினாரோ, ‘நீட்’ தேர்வு செல்லும் என்றாரோ – அந்த நீதிபதியான ஏ.ஆர்.தவே தலைமையில் அமைந்த அமர்வு பி.ஜே.பி. அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவினை விசாரித்தது என்பதுதான்! (நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதைதான்!) எதிர்பார்த்தபடியே ‘நீட்’ செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது (16.3.2016).
‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி அ.இ.அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த இரு மசோதாக்களுக்கும் சட்டப்பேரவையில் தி.மு.க. ஆதரவும் அளித்தது.

2021 தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டி ருந்தபடி, ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு தந்த அறிக்கை யின்படி ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது (13.9.2021).
முறைப்படி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர்
திரு.ஆர்.என்.ரவி (1.2.2022).

தமிழ்நாட்டுக்கு ‘நீட்’டிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பதில் எப்பொழுதுமே உறுதி யான நிலையில்தான் தி.மு.க. இருந்து வருகிறது.
நேற்றுகூட (7.6.2024) நமது முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் தளப் பதிவில் ‘‘‘நீட்’ தேர்வை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக அறுதியிட்டு உறுதியாகக் கூறியுள்ளாரே!
2024 மக்களவைக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை யில், ‘நீட்’டிலிருந்து விலக்கு வேண்டும் என்று விரும்பும் மாநிலங்களுக்கு, அந்த உரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே!
‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவி சாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்? என்ற வினாவை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியும் ‘நீட்’டை எதிர்த்துக் கருத்துக் கூறியுள்ளார்.
2. ‘நீட்’ தேர்வு நேர்மையாக நடக்கிறதா – அதில் முறைகேடு கிடையாதா?
இந்தக் கேள்விக்கு நாடாளுமன்றத்திலேயே அதி காரப்பூர்வமான பதில் கிடைத்திருக்கிறது.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த மக்க ளவை உறுப்பினர் பூரா நர்சையா கவுட் என்பவர், ‘நீட்’ தொடர்பாக 2.4.2018 அன்று எழுப்பிய வினா –

‘‘மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வினை நடத்தும் புரோமெட்ரிக் எனும் அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வு தொடர்பான மென்பொருளைக் கையாட முடியும் என்று ஒப்புக்கொண்டுள்ளதா?”
இந்தக் கேள்விக்கு மனிதவளத் துறையின் இணையமைச்சர் டாக்டர் சத்யபால் சிங் அளித்த பதில்:
‘‘2017 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ தேர்வை அமெரிக்க நிறுவனமான புரோமெட்ரிக் நிறுவனத்துடன் நடைபெற்ற தொலைப்பேசி உரையாடலில், தங்களது மென்பொருள் கையாடப்பட்டதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது – இதன் அடிப்படையில் டில்லி உயர்நீதிமன்றத்திலும் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது” என்று ஒன்றிய அமைச்சரே மக்களவையில் ஒப்புக்கொண்டுள்ளாரே!

அப்படியென்றால், அந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தி யிருக்கவேண்டாமா? தவறுக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பிரதமர் மோடிக்குத்தான் வெளிச்சம்!
இவ்வாண்டு மே 5 ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் நடந்தது என்ன? ஏடுகள் எல்லாம் கைகொட்டி நகைக்கின்றன. தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
தேசிய அளவிலான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்தது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’-இளநிலை 2024) முடிவுகளை ஜூன் 4 ஆம் தேதி வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டைச் சோ்ந்த 8 மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் 720–க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனா்.

இந்த நிலையில், ‘நீட்’ நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்கள் சந்தே கிக்கின்றனர். ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தா னில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடங்களை பிடித்த மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாலும் குழப்பம் மேலும் நிலவுகிறது. ‘நீட்’ தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். ஆனால் கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என சக மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
‘நீட்’டில் நடைபெற்ற முறைகேடுகள்பற்றி உச்சநீதி மன்றமே முன்னின்று விசாரணைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று (7.6.2024) வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப் பதிவில், ‘‘நீட்டிலும், பிற தேர்வுகளிலும் பங்கேற்ற மாணவர்களுக்கு நீதி வேண்டும். எனவே, நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்மட்ட விசாரணை நடத்தவேண்டும்” என்று கோரி யுள்ளார்.

இந்த நிலையில் ‘நீட்’ தேர்வு முறைகேடுகள் குறித்து பிரியங்கா காந்தி தனது சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
”நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வில் நடந்த முறை கேடுகள் அம்பலமாகியுள்ளன. முதலில் ‘நீட்’ தேர்வு வினாத்தாள் வெளியானது; பிறகு தேர்வு முடிவு களில் மோசடி நடந்துள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரே மய்யத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றது பற்றி மாணவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ‘நீட்’ தேர்வு முடிவுக்குப் பிறகு நாடு முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. ‘நீட்’ முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்?. மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்கவேண்டும்.”
-இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வை மராட்டியமும் எதிர்க்கிறது
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மராட்டிய மாநில அரசு சார்பில் தேசிய மருத்துவக்கவுன்சிலிடம் முறை யிடுவோம் என்று மராட்டிய மாநில அமைச்சர் அசன் முஷ்ரிப் அறிவிப்பு
நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் மராட்டிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மோசடியாக அரியானா, ராஜஸ்தான் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தேர்வு மய்யங்களில் மோசடியாக தேர்வெழுதி அவர்கள் அதிகமதிப்பெண் பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது தொடர்பாக சிபிஅய் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், குறிப்பாக தேர்வெழுதிய மராட்டிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தேசிய மருத்துவக் கவுன்சிலிடம் புகார் அளிக்க உள்ளோம் என்று அமைச்சர் அசன் முஷ்ரிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டங்கள்
நடந்ததும் உண்டு!
இதுதான் ‘நீட்’ தேர்வு நேர்மையாக நடக்கிறது என்பதற்கு அடையாளமா? ‘நீட்’ தேர்வு வினாத்தாள்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. குஜராத் போன்ற மாநிலங்களில் கேள்விகள் எளிதாக உள்ளன என்ற குற்றச்சாற்றும் பரவலாகப் பரவியுள்ளது என்பதையும் அலட்சியப்படுத்த முடியாது.
3. ‘‘நீட்” தேர்வு என்பது தகுதி – திறமைக்கு அடையாளமா?
நுழைவுத் தேர்வுகளைப்பற்றி நாம் சொல்லுவதைவிட நீதிபதிகள் வாயிலாகக் கேட்பது பொருத்தமானதாக இருக்கும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் கூறியது நுட்பமானது – கவனிக்கத்தக்கது.
‘‘நுழைவுத் தேர்வு நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட, ‘‘கோன் பனேகா குரோர்பதி” தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போல், அனுமானத்தின் அடிப்படையில் விடைகள் ‘டிக்’ செய்யும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்களே!

இப்பொழுது ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட இரண்டாண்டுகள்வரை காத்திருந்து, பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு, தனிப்பயிற்சியில் சேர்ந்தவர்கள்தானே பெரும்பாலும்? இது எல்லோராலும் ஆகக் கூடிய காரியமா? ‘நீட்’டில் மோசடி நடக்கவில்லையா? மோசடியாக மதிப்பெண் பெற்றவர்கள்தாம் தகுதி – திறமை உள்ளவர்களா?
‘நீட்’டில் முதுகலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 45 டாக்டர்கள் உள்பட 52 பேர்மீது சி.பி.அய். வழக்குத் தொடர்ந்ததா, இல்லையா?
பன்னிரெண்டு வகுப்புவரை படித்து – அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டர் ஆனவர்கள் எல்லாம் தகுதி குறைவானவர்களா?
மகாராட்டிரத்தில் லோனி நகர் பிரவாரா மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.அய். என்ற அடிப்படையில், 3,26,385 ஆவது ரேங்கில் இருந்த ஒருவருக்கு இடம் கிடைத்ததே!

கோவாவில் சிறீதேவராஜ் மருத்துவக் கல்லூரியில் ரேங்க் வரிசையில் 8,76,357 ஆம் இடத்தில் இருந்த ஒருவருக்கு என்.ஆர்.அய். என்ற அடிப்படையில் (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 27.3.2022) இடம் கிடைத்ததே – இங்கு மட்டும் தகுதி குதிகால் பிடரியில் அடிபட ஓடி ஒளிந்துவிட்டதா?
மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இதுதானோ?
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் முதல் தலைமுறையாகப் படித்து டாக்டராக வேண்டும் என்று கனவு கண்ட அரியலூர் (குழுமூர்) அனிதா 2017 இல் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200–க்கு 1176 மதிப்பெண் பெற்றாரே! (பத்தாம் வகுப்பில் 500–க்கு 476) இது தகுதி திறமைக்கு அடையாளம் கிடையாதா?

அதேநேரத்தில், அந்த அனிதாவால் ‘நீட்’ தேர்வில் வெறும் 86 மதிப்பெண்கள் மட்டும்தானே பெற முடிந்தது!
‘நீட்’ என்பது சமூகநீதியைக் கொலை செய்யும் கண்ணிவெடி என்பது இப்பொழுது புரியவில்லையா?
‘நீட்’டின் கொடுவாளால் தமிழ்நாட்டில் மட்டும் தற்கொலை செய்துகொண்டவர்கள் 27 இருபால் மாணவர்கள். வட மாநிலங்களிலும் கூட குறிப்பாக ராஜஸ்தானில் 2016 இல் 17, 2017 இல் 7, 2018 இல் 18, 2023 இல் 15, 2024 இல் 15 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரத்தைப் பார்த்த பிறகும் பிரதமர் மோடிக்கும், அவரின் சித்தாந்த தாய்வீடான ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கும்பலுக்கும் இதயம் கனக்கவில்லையே! உயர்ஜாதி ஆணவ ஆதிக்கக்காரர்கள் திட்டமிட்டு செய்துவரும் நிலையில், இரக்கம் எப்படி வரும்?
4. ‘நீட்’டினால் பாதிக்கப்பட்டவர்கள் யார், யார்?
2016 இல் ‘நீட்’ இல்லாதபோது அரசு மேனிலைப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பெற்ற இடங்கள் 30; ‘நீட்’ வந்த பிறகு, வெறும் 5 இடங்கள். ‘நீட்’ இல்லாதபோது, மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் படித்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 3546. ‘நீட்’ வந்த பிறகு கிடைத்திட்ட இடங்கள் 2314. இழப்பு 1232 இடங்கள்.

‘நீட்’ இல்லாதபோது 2016 இல் சி.பி.எஸ்.இ. மாண வர்களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 12. ‘நீட்’ வந்த பிறகு, அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1220. அதாவது 20 மடங்கு அதிகம்!
இப்பொழுது புரியவில்லையா – ‘நீட்’ என்பது யார் வயிற்றில் அடித்து, யார் வயிற்றில் அறுத்துக் கட்டு வதற்கு என்பது எளிதாகப் புரியுமே!
தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.ஏ.கே.ராஜன் தலைமையிலான ‘நீட்’ தொடர்பான அறிக்கை தரும் புள்ளி விவரத்தைப் பார்த்தால் இது புரியுமே!
இவ்வாண்டு நிலை என்ன? (2022)
மொத்த இடங்கள்: 6,999
அரசு கல்லூரிகள்: 4,349 இடங்கள்
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்: 2650 இடங்கள்

சி.பி.எஸ்.இ. மாணவர்களின் ஆதிக்கம் தரவரிசைப் பட்டியல்:
முதல் 10 ரேங்கில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 8, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2, முதல் 100 ரேங்கில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 81, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 17, முதல் 1000 ரேங்கில், மாநில பாடத் திட்டத்தில் படித்த 394 மாணவர்கள் மட்டுமே தேர்வு. ‘நீட்’ தேர்விற்கு முன், சி.பி.எஸ்.இ. வாரியத்தில் இருந்து ஒரு சதவிகிதம் (1%) மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இப்போது அது 39 சதவிகிதமாக ஆகிவிட்டது!
‘நீட்’ தேர்வுக்குமுன், மாநில பாடத் திட்டத்தில் படித்த 98.2 சதவிகித மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடிந்தது. தற்போது அது 59 சதவிகிதமாக குறைந்துள்ளது.
‘நீட்’ தேர்வுக்கு முன், கிட்டத்தட்ட 14.8 சதவிகிதம் தமிழ் வழி மாணவர்கள், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். ஆனால், தற்போது அது 2 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கும், வசதி படைத்த குடும்பத்தினருக்கும் மட்டுமே ஆதரவாக உள்ளது.
நீட் தேர்வு முறை கேட்டார். 20.38 லட்சம் மாண வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யார் யாருக்கு இடம் கிடைத்துள்ளது?
ஆங்கில ‘இந்து’ பத்திரிகையில் நேற்று (6.2.2022) வந்துள்ள ‘நீட்’ தேர்வு குறித்த கட்டுரையிலும், பிளஸ் 2 வில் 1137 மதிப்பெண் பெற்ற நட்சத்திர ப்ரியா, 2017 இல் ‘நீட்’ எழுதத் தொடங்கி, மூன்று ஆண்டுகால முயற்சிக்குப் பின், 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் காரணமாக நெல்லை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. மூன்று ஆண்டுகாலம் வீண் அல்லவா? பிளஸ் 2 அடிப்படையிலேயே இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?
தகுதிப் பட்டியலில் 9,976 பேர் மட்டுமே இவ்வாண்டு தேர்வெழுதியோர். 14,973 பேர் திரும்ப எழுதியவர்கள் (ரிப்பீட்டர்ஸ்). அதாவது 2, 3, 4 ஆண்டுகள் கோச்சிங் சென்று விடாது படையெடுப்போர். வசதி, வாய்ப்பு உள்ளவர்களால் மட்டுமே பல லட்சங்கள் செலவு செய்து, ஒரே தேர்வை ஈராண்டு, மூவாண்டு எழுத செலவிடவும் முடியும். குடும்பச் சூழலும் அதை அனுமதிக்கும். சேர்க்கை முடிவில் இன்னும் தெளிவு பிறக்கும். மறுமுறை தேர்வு எழுதுவோரும், நடப்பாண்டு படிப்பை முடித்துவரும் புதியவர்களும், ஒரே தேர்வை எழுதினால், யாருக்குச் சாதகமாக அத்தேர்வு அமையும் என்பது வெளிப்படை. அதுதான் ‘நீட்’ தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘நீட்’ தேர்வு, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், தேர்வை பலமுறை எழுதவும், கோச்சிங் மூலம் பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது. நடப்பு ஆண்டிலும் அதே நிலைதான்.

மாநில அரசுக்கு உரிமை உண்டு
ஆகவேதான், மக்கள் நலன் சார்ந்த அரசு என்கிற முறையில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்ற முயல்கிறது. அரசமைப்புச் சட்டப்படியும் அத்தகைய சட்டம் கொண்டுவர எந்தத் தடையும் இல்லை என்கிற நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடி வெடுத்தபடி, மீண்டும் ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது நியாயமான, சமூகநீதியின்படியான நடவடிக்கையே!
‘‘தேர்வு மார்க்குகள் – திறனறிவின் உண்மை அளவு கோல் ஆகாது” என்ற உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பில் இரு நீதிபதிகளின் தீர்ப்பின்படியேகூட, நீட் தேர்வு ஏற்கத்தக்கதா?
என்.ஆர்.அய். (வெளிநாட்டில் வாழும் இந்தியர்) என்ற பெயரில் 158 பேர் ஒரே இரவில் என்.ஆர்.அய். ஆகி, எம்.பி.பி.எஸ். இடங்களைப் பிடித்தனர். டாக்டர் ஆவதற்கு ஒரு கோடி ரூபாய்க்குமேல் கட்டணம் செலுத்தக் கூடியவர்கள் இவர்கள்.
உண்மையில் ‘நீட்’ மருத்துவக் கல்வியை விலை உயர்ந்த படிப்பாகவும், ஏழை மக்களை வெளியேற்றும் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது என்று பேராசிரியர் திலீப் மண்டல் குறிப்பிடுவதையும் கவனிக்க
வேண்டும்.

5. குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது, ‘நீட்’டைப்பற்றிய நிலைப்பாடு என்ன?
குஜராத் மாநில அரசு இந்திய மருத்துவக் கவுன்சி லுக்கு ‘நீட்’ தேர்வு குறித்து, தமது மாநில நிலைப்பாடு என்ன என்பது குறித்து குஜராத் மாநில சுகாதார அமைச்சர் ஜெயநாராயணன் வியாஸ் எழுதியது என்ன?
Gujarat govt not to accept NEET for MBBS admission Gandhinagar, 11 August, 2011
Gujarat government on Wednesday declared that the state will not accept the National Eligibility cum Entrance Test (NEET) for admission in MBBS courses.
“We have decided not to accept NEET. We have informed this to the Union government,” Gujarat Health Minister Jaynarayan Vyas said.
NEET is an all India common entrance test for entry to medical colleges of the country proposed to be introduced in the year 2012-13 by the Medical Council of India (MCI).
The MCI had asked for the opinion of different states regarding the NEET.
Gujarat government had formed a three member task force to give suggestions on how NEET will affect students of Gujarat who want to opt for medical education, Vyas said.
“The task force was formed after parents associations protested on the NEET issue,” he said adding, “The task force has given its report and on the basis of that we have decided that Gujarat will not join NEET.” Gujarat already has a system of centralised admission for MBBS, wherein the result of class XII and GUJCET test are taken into account, Vyas said. deshgujarat. com/2011/08/117 gujarat govt not to acceptneet for mbbs admission.

‘‘எங்கள் மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் மருத்துவர்களாக வரவேண்டும் என்பது எங்கள் மாநில உரிமையாகும். இந்திய மருத்துவக் கவுன்சில் எங்களை ‘நீட்’டுக்காகத் தயாராகுமாறு கூறியிருந்தது. ஆனால், எங்களால் ‘நீட்’ தேர்வை ஏற்க முடியாது. எங்கள் மாநிலத்திற்கென்று சிறந்த கல்வி அமைப்பு உள்ளது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் எங்கள் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
நாங்கள் ‘நீட்’பற்றி ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்தோம். அந்தக் குழு மாநில அரசின் பாடத் திட்டத்தின்படி படிக்கும் மாணவர்களுக்கு ‘‘நீட்” தேர்வு சுமையை ஏற்படுத்தும் என்று அந்தக் குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆகவே, நாங்கள் ‘நீட்’டை ஏற்றுக்கொள்ள முடியாது.”
குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி சொன்ன அதே கருத்தையே நாங்கள் சொல்லுகிறோம். பிரதமரான பிறகு அந்தர்பல்டி அடிப்பது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

6.திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் என்ன?
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் சமூக நீதியை தன் விழியென உயிர்மூச்சாகக் கொண்ட இயக்கம். தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டதே சமூக நீதிக்காகத்தான்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தது – தந்தை பெரியாரும், இந்த இயக்கமும்தான்.
இந்தியாவிலேயே 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்ட 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்போடு தமிழ்நாட்டில் நிலைக்கிறது என்றால், அதற்கு அடித்தளமும், ஆணிவேரும் திராவிடர் கழகமே!
அகில இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்ற இயக்கமும் திராவிடர் கழகமே!

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த, பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு விதித்த ஆணையை முறியடித்ததிலும் சரி, அவர் திணித்த நுழைவுத் தேர்வை வீட்டுக்கு அனுப்பியதிலும் சரி திராவிடர் கழகத்திற்கு மகத்தான பங்கு உண்டு.
‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு திராவிடர் கழகத்தின் மாநாடுகள், போராட்டங்கள், பேரணிகள் எத்தனை எத்தனை!
எடுத்துக்காட்டாக அரக்கோணத்தில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பு மாநாடு (19.11.2016), திருச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அடங்கிய முத்தரபு மாநாட்டை நடத்தியதும் திராவிடர் கழகமே (19.12.2016).
2017 மார்ச் 18 முதல் மார்ச் 21 வரை ‘நீட்’டை எதிர்த்து திராவிடர் கழக மாணவர் கழகத் தோழர்களின் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் தமிழ்நாடு தழுவிய அளவில்.

3.4.2022 முதல் 25.4.2022 வரை நாகர்கோவில் முதல் சென்னை வரை, நீட் மற்றும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து எனது தலைமையில் தொடர் பிரச்சாரப் பயணம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
வரும் 15.6.2024 அன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்ட – போராட்ட பொதுக்கூட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பி.ஜே.பி.யைத் தவிர அனைத்துக் கட்சிகளும் நீட்டை எதிர்க்கக் கூடியவைதான் – காரணம், இது பெரியார் மண் – திராவிட பூமி.
ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம், வாரீர்!
‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்! ஒன்றி ணைவோம் – போராடுவோம் – வெற்றி பெறுவோம், வாருங்கள் தோழர்காள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
8.6.2024

No comments:

Post a Comment