அண்ணாமலைக்கு ‘அரோகரா' பிஜேபி முன்னணியினரே கலகக் கொடி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 8, 2024

அண்ணாமலைக்கு ‘அரோகரா' பிஜேபி முன்னணியினரே கலகக் கொடி?

சென்னை, ஜூன் 8- தமிழ்நாடு பாஜகவில் தன்னை தாண்டி யாரும் வளரக் கூடாது என்பதில் அண்ணாமலை தெளிவாக இருப்பதாகக் கூறிய பாஜக நிர்வாகி கல்யாணராமன், மாநிலத்தில் உள்ள முக்கிய பாஜக தலைவர்களை காலி செய்ய வேண்டும் என்பதே இவர்கள் இலக்கு என்றும் சாடியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி போட்டியிட்ட 40க்கு 40 என்று அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 10+ தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு வர முடிந்த போதிலும் அக்கட்சியால் எங்கும் வெல்ல முடியவில்லை.

இதற்கிடையே இப்போது தமிழ்நாடு பாஜகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழிசை வெளிப்படையாகவே எச்சரித்து இருந்தார்.

தமிழிசை: “நான் கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக் கூடிய வர். நான் உட்கட்சி அய்டி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோச மாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேனாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்” என்று கூறியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே அறிவுசார் பிரிவு மாநில தலைவர் கல்யாணராமனும் அண்ணாமலை குறித்து சில பகீர் புகார்களை வெளிப்படையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் முன்வைத்துள்ளார். இங்குள்ள மற்ற தலைவர்களை காலி செய்துவிட வேண்டும் என்பதே அண்ணாமலையின் நோக்கம் என அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக நிர்வாகி கல்யாணராமன் தனது எக்ஸ் பக்கத்தில், “கலகத்தில் தான் நீதி பிறக்கும் என்பார்கள்… அண்ணாமலை டில்லியில் ஓர் அமைப்பை உருவாக்கி வைத்துள்ளார்.. அது அவரை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. கட்சியை வளர்க்க தங்களால் இயன்றதைச் செய்த பொன். ராதாகிருஷ்ணன், எச் ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல்,கணேசன் ஆகியோருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

கிருஷ்ண குமார், முருகன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் தலைமையில் இயங்கும் வார்ரூம் ரவுடிகளால் இந்த தலைவர்கள் அனைவரும் சிறுமைப்படுத்தப்பட்டனர்.. அண்ணாமலை யார், அவர் கருநாடகாவில் என்ன செய்து கொண்டிருந்தார்.. அங்குள்ள அரசியல்வாதிகளை உளவு பார்த்ததற்காக அவர் எப்படி கருநாடகாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது பற்றி இவர்களுக்கு ஒரு துளி கூட தெரியாது.

இரண்டே நோக்கம்: இந்த வார் ரூமில் இருப்பதே மொத்தம் இரண்டு வகையான மக்கள் தான்.. 1. கட்சிக்குப் பாதகம் என்றாலும் பரவாயில்லை அண்ணாமலையை விளம்பரப்படுத்த வேண்டும்.. 2. கட்சிக்குப் பாதகம் என்றாலும் பரவாயில்லை மற்ற தலைவர்களைச் சிறுமைப்படுத்த வேண்டும்.

பாஜகவால் அதிக ஊதியம் செலுத்தப்பட்டு கிருஷ்ண குமார் முருகன் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பு எந்தவொரு பாஜக தலைவர்களின் கண்காணிப்பிலும் இல்லை.. அமலாக்கத் துறையின் வழக்கு இருப்போரின் பணத்தைப் போலச் சந்தேகத்திற்குரிய முறையில் செயல்பட்டனர். அவர்களில் சிலர் தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்கள்.. இன்னும் சிலர் மக்களிடம் 1000 கோடி ரூபாய் ஏமாற்றியவர்கள்.. ஒருவரைத் தவிர மற்ற அனைத்து பாஜக தலைவர்களையும் காலி செய்துவிட வேண்டும் என்பதே இவர்களின் செயல்திட்டம்.

எல்.கணேசன் குடும்பத்தில் சில நிகழ்ச்சிகள் நடந்த போது அதில் பங்கேற்க மம்தா வந்திருந்தார். இது ​​அரசியல் முதிர்ச்சி என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத இவர்கள் எல்.கணேசனை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
இங்கு நான் சொல்ல வரும் பாயிண்ட் சிம்பிள்… புதிதாக யாரும் உருவாகக் கூடாது என்பதில் அண்ணாமலை தெளிவாக இருக்கிறார். தற்போதுள்ள முக்கிய தலைவர்களையும் காலி செய்துவிட வேண்டும் என விரும்புகிறார்.. அதற்குப் பதிலாக அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறார்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment