கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
திருச்சி, ஜூன் 10- தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று (9.6.2024) கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 20 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 17 ஆயிரம் பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறை வசதி ஏற்படுத்தப்படும். கல்வித் துறையில் தமிழ்நாடு போட்டி போடுவது பிற மாநிலங்களோடு அல்ல, பிற நாடுகளுடன்.
நீட் தேர்வு ஏழை மாணவர்களை பழிவாங்க கூடிய ஒன்றாகஇருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். நீட்தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மகாராட்டிரா ஷிண்டே அரசு வலியுறுத்தி உள்ளது. நீட் தேர்வைப் பொறுத்தவரை இனிமேல் தான் ஆட்டம் இருக்கிறது. இந்த முறை நீட் தேர்வை ஒழிப்பதற்கு எல்லா வகையிலும் கடுமையாகப் போராடுவோம்.
பா.ஜ. கூட்டணி ஆட்சி விரைவில் கலைந்துவிடும்
நாராயணசாமி நம்பிக்கை
புதுச்சேரி, ஜூன் 10- ஒன்றியத்தில் அமையப்போகும் பாஜ கூட்டணி ஆட்சி விரைவில் கலைந்துவிடும் என்று புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதுகுறித்து புதுவையில் அவர் அளித்த பேட்டி:
இந்த நாட்டு மக்கள், தகுந்த நேரத்தில் பாஜவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். உண்மையிலே பிரதமர், சிறந்த அரசியல்வாதியென்றால் பிரதமர் பதவியை நாடி சென்றிருக்க கூடாது. வெளிநாட்டு ஊடகங்கள் எல்லாம், மோடியின் அராஜகத்தும், அகம்பாவத்துக்கும் இந்திய மக்கள் தகுந்த பாடம் கொடுத்துள்ளனர் என புகழாரம் சூட்டியுள்ளன.
எனவே இந்த ஆட்சி குறைப் பிரசவமாகத்தான் இருக்கும். 5 ஆண்டுகாலம் இந்த ஆட்சி நடைபெறாது. சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். மோடியின் சர்வாதிகாரப் போக்கு அவர்களுக்கு ஒத்துவராது. ஆகவே இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்துவிடும்.
கூட்டணி கட்சிகளே அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். புதுச்சேரியில் வைத்திலிங்கம் வெற்றியின் மூலம் மாநில மக்கள், ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பது தெளிவாகிறது.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரங்கசாமி தார்மீகப் பொறுப்பேற்று கூண்டோடு பதவி விலக செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத
193 மருத்துவர் நியமனம் ரத்து
சென்னை, ஜூன் 10- ஆரம்ப சுகாதார நிலையங் களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை பொதுசுகாதாரத்துறை ரத்து செய்தது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த 25 ஆயிரம் மருத்துவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்ச்சி பெற்றவர்களில் 1,021 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில் 193 பேர் பணி ஆணை பெற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் சேரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது பணி ஆணையை பொது சுகாதாரத் துறை ரத்து செய்துள்ளது.
மருத்துவப் பணியாளர் தேர்வில் இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களை அப்பணியிடங்களில் நியமித்து உத்தரவிட்டுள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், இது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும், காலிப் பணியிடங்கள் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment