குடிஅரசு பற்றிக் கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 2, 2024

குடிஅரசு பற்றிக் கலைஞர்

featured image


எனக்கு நன்றாக நினை விருக்கிறது. பெரியார் அவர்கள் கிண்டலாக ஒன்று சொல்வார்கள். பெரியார் குடிஅரசுப் பத்திரிகையை ஆரம்பித்த காலத்தில் பச்சை அட்டைப் பத்திரிகை என்று அதற்குப் பெயர் இருந்தது. அப்போது அதைப் படிப்பவர்கள் மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகப் படித்து முடித்து விட்டு, அதை மற்றொரு பத்திரிகையில் சுருட்டி அதைத் தங்க ளுடைய கக்கத்திலே வைத்துக் கொண்டு சென்ற நிலையெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது.
இவன் பச்சை அட்டைப் பத்திரிகையைப் படிப்பவன் என்றெல்லாம் குறை சொல்லப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போது பெரியார் சொல் லுவார். நான் வெளியிடுகின்ற – நான் எழுதுகின்ற குடிஅரசுப் பத்திரிகையை யாரும் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் கவலையில்லை. நான் ஒரு வனே எழுதி, நான் ஒருவனே அச்சடித்து, நான் ஒருவனே படித்துக் கொள்கிறேன் என்று! அப்படிச் சொன்ன காரணத்தினால்தான் குடிஅரசுப் பத்தி ரிகை – அந்தப் பச்சை அட்டைப் பத்திரிகை – பிறகு பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெறுகின்ற அளவுக்கு வளர்ந்து சுயமரியாதைக் கொள்கைகளை வளர்த்துப் பெரியார் அவர்களுடைய எண்ணங்களை எழுத்துக் களை நாட்டுக்குத் தருகின்ற அளவுக்குப் பெரிதாக வளர்ந்தது. அதன் காரணமாக இன்றைக்கு அறிவார்ந்த அரசு – பகுத்தறிவாளர்கள் நடத்துகின்ற அரசு அமைவதற்கு அது காரணமாக இருந்தது என்பதை நாம் யாருமே மறந்துவிட முடியாது.
(14.7.1971 – தி ரைசிங் சன் ஆங்கில வார ஏடு தொடக்க விழாவில் கலைஞரின் சொற்பொழிவிலிருந்து…)

No comments:

Post a Comment