லக்னோ, ஜூன் 16- 4 மாதங்களாக நடந்து வந்த இந்த உண்ணா நிலையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவில் தேவகி நந்த் சர்மா (வயது 66) என்ற சமூக ஆர்வலரும் இடம்பெற்றிருந்தார். இந்த குழுவின் அறிக்கையில் அதிருப்தி அடைந்த அவர், அந்த ஊழல்களுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பட்டினிப் போராட்டத்தில் இருந்து வந்தார். தனது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே இந்த போராட்டத்தை அவர் நடத்தினார்.
4 மாதங்களாக நடந்து வந்த இந்த உண்ணாநிலை காரணத்தால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே சமீபத்தில் அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நெகிழி குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்
மாநகராட்சி ஆணையா்
சென்னை. ஜூன் 16- சென்னை- நந்தம்பாக்கம், வா்த்தக மய்யத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ‘வோ்ல்ட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ்’ அரங்கை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் 14.6.2024 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
நெகிழி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாணவா்களுக்கு நெகிழி சேகரிப்பு, மறுசுழற்சி குறித்த செயல்முறை விளக்கப்படுகிறது. நெகிழியை மறு சுழற்ச்சி செய்து அதில் இருந்து ஆடைகள், காலணி, இருக்கைகள் செய்யும் தொழில்நுட்பம், அவற்றை தயாரிக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. எனவே நெகிழியை முறையாக அகற்றி மறுசுழற்சி செய்ய வேண்டும்.
சென்னை நகரில், 60 சதவீதம் போ் குப்பையை பிரித்து, கொடுத்து வருகின்றனா். மீதமுள்ள மக்களுக்கும் குப்பையை பிரித்து கொடுக்க வேண்டும் என்ற மனமாற்றம் வரவேண்டும். பொது மக்கள் நீா்நிலைகளில் குப்பையை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
நெகிழியை பற்றி மொத்தமாக குறை கூறுவது தவறான கருத்து. மருத்துவத் துறையில் நெகிழி பயன்பாடு உள்ளது. நெகிழி சேகரிப்பு, மறு சுழற்சி குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்தக் கண்காட்சி நாளை ஜூன் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் 87.8 டிகிரி வெப்பம் பதிவானது
சிம்லா, ஜூன் 16- நாட்டின் குளிர் பிரதேசமான இமாசலப் பிரதேச மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது.
இந்த நிலையில் இமாசலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நேரி நகரில் 14.6.2024 அன்று 113.9 டிகிரி வெப்பம் பதிவானது.
இது வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை என மாநில வானிலை ஆய்வு மய்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் தலைநகர் சிம்லாவில் 87.8 டிகிரி வெப்பம் பதிவானது.
No comments:
Post a Comment