மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பிஜேபி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பிஜேபி அரசு

featured image

‘நீட்’டால் பாதிக்கப்படும் 24 லட்சம் மாணவர்களின் குரலை
நாடாளுமன்றத்தில் உரக்க எழுப்புவோம்  காங்கிரஸ் அறிவிப்பு

புதுடில்லி,ஜூன்14- காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், டில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 4ஆம் தேதி வெளியிட்டது புதிராக உள்ளது. தேர்தல் முடிவுகளில் எல்லோரும் மூழ்கி இருப்பார்கள் என்பதால், நீட் தேர்வு முறைகேடு பற்றிய விவாதத்தை தவிர்ப்பதற்காக அந்த நாளில் வெளியிட்டுள்ளனர்.

பயிற்சி மய்யங்களின் வாக்குறுதி களை நம்பி சாதாரண குடும்பங்கள் ரூ.30 லட்சம்வரை செலவழித்துள்ளன. தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கால அறிவுரை சொல்லும் பிரதமர் மோடி, நீட் தேர்வு மாணவர்களின் மனஉளைச்சலை மறக்கக்கூடாது.

நீட் தேர்வு ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்கா ணிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போதைய தேசிய தேர்வு முகமை தலைவர் தலைமையில் நேர்மையான விசாரணை நடக்காது. ஆகவே, அவரை நீக்க வேண்டும். ஆனால், விசாரணை தொடர்பான காங்கிரசின் கோரிக்கையை பா.ஜனதா அணுகும் விதம் பொறுப்பற்றதாக இருக்கிறது. பிரச்சினையில் இருந்து ஒன்றிய அரசு தப்பி ஓடுகிறது. பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். பதவியேற்பு விழாக்களில் பங்கேற்பதிலும், வெளிநாட்டு பயணத்திலும் தீவிரமாக இருக்கிறார்.

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும், வினாத்தாள் கசியவில்லை என்று மறுக்கிறார்.

ஆனால், ‘இந்தியா’ கூட்டணி, நீட் தேர்வு மாணவர்களின் பிரச்சினையை கையில் எடுக்கும். அது எங்கள் கடமை. நாடு முழுவதும் நிலவும் கோபம், நாடாளுமன்றத்திலும் எதி ரொலிக்கும். 24 லட்சம் மாண வர்களின் குரலை நாடாளு மன்றத்தில் சத்தமாக எழுப்பு வோம். ஒன்றிய அரசை பணிய வைக்கும் அளவுக்கு இந்தியா கூட்டணிக்கு பலம் உள்ளது. ஒன்றிய அரசை பொறுப் பேற்கச் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தளப் பதிவில் கூறி யிருப்பதாவது:- நீட் தேர்வில் கருணை மதிப்பெண் மட்டுமே பிரச்சினை அல்ல. முறைகேடு, ஊழல், வினாத்தாள் கசிவு ஆகியவை நடந்துள்ளன. தேர்வு மய்யங்களுக்கும், பயிற்சி மய்யங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. ‘பணம் கொடு, வினாத்தாள் வாங்கிக்கொள்’ என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

எனவே, ஒட்டுமொத்த ஊழல் பற்றியும் சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும். மோடி அரசு சம்மதிக்காவிட்டால், உச்ச நீதிமன்றக் கண்காணிப்புடன் நேர்மையான விசாரணை நடத்தக் கோருவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment