ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1: மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் நாட்டுக்கு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்?

– எம்.செல்வம், செங்கல்பட்டு

பதில் 1: இம்முறையாவது அனைவருக்குமான பிரதமராக அவரது ஆளுமை ஆட்சி – அமைய வேண்டும்.
எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள் அல்ல; மாறாக ஜனநாயகக் காப்பு ‘பிரேக்குகள்’ – ஆட்சியின் பாதுகாப்புக்கும் அவை தேவை என்பதை உணர்தல் அவசியம்.

——–

கேள்வி 2: மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்து இருப்பது குறித்து?

– வே.வெங்கடேசன், திருத்தணி

பதில் 2:வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறலாம்’ என்ற பழமொழிதான் – ஜனநாயகத்தின் கூறு என்பதைக் காட்டுகிறது! மக்கள் சக்தி மாறக்கூடியது.

——–

கேள்வி 3: சமூக நீதி என்றால் என்ன?

– மா.சண்முகசுந்தரம், மதுரை

பதில் 3: சமூக அநீதி காலங்காலமாய் இருந்ததை நீக்கும் மாமருந்து. ‘அனைவருக்கும் அனைத்தும்’, ‘எல்லார்க்கும் எல்லாமும்!’,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” போதுமா?

——–

கேள்வி 4: வாழ பணம், குணம் எது தேவை?

– வா.பரிமளம், திண்டிவனம்

பதில் 4: இரண்டும் தேவை. ஆனால் குணத்தை இழக்காத பணம் தேவையான அளவுக்கு இருந்தால் போதும்! பணம் நம் பணியாளனாகவே இருக்கட்டும். குணத்தை மாற்றும் குடிபோதையாக மாறிவிடக் கூடாது!

——–

கேள்வி 5: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவினை எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி நாடாளுமன்ற தேர்தல் முடிவு களேபரத்திற்கு இடையில் அவசரமாக வெளியிட்டது ஏன்?

– சங்கமித்ரா, மன்னார்குடி

பதில் 5: எல்லாம் திட்டமிட்ட சூழ்ச்சி வலைதான். ஊர் சிரிக்கிறதே ‘நீட்’ யோக்கியதையைக் கண்டு!

——–

கேள்வி 6: இந்தியாவின் வரலாற்றை எழுத அமைக்கப்பட்ட குழுவில் தென் இந்தியாவைச் சேர்ந்த எவரும் இல்லை. இதில் ஒருவர் கூட பழங்குடியை சேர்ந்தவரோ, ஒடுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களோ இல்லாதது பற்றி?

– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில் 6: வன்மையான கண்டனத்திற்குரியது. நமது எம்.பி.க்கள் இதனை நாடாளுமன்றத் தொடரில் எழுப்பி, தீர்வு காண வேண்டும்.

——–

கேள்வி 7: குவைத் தீ விபத்தில் தமிழ்நாடு அரசின் பணி எப்படி?

– பா.முகிலன், சென்னை-14

பதில் 7: வழக்கம்போல உடனடியாக பணிகள் பலே

முதலமைச்சர், அயலகத்துறை அமைச்சர் – அரசு அதிகாரிகள்!

——–

கேள்வி 8: அரசியல் கட்சிகள், அமைப்புகள் மக்களிடம் நன்கொடை என்று வசூலிக்கும் பணம் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குச் செலவழிக்கப்படுகிறதா?

– க.கலை, நெல்லிக்குப்பம்

பதில் 8: சிக்கலான, எளிதில் பதில் அளிக்க முடியாத கேள்வி இது!

——–

கேள்வி 9: ‘நீட்’ தேர்வு முழுமையாக ஒழிக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்; பா.ஜ.க. அரசு ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறதே, நீட் தேர்வு ஒழிக்கப்படுமா?

– மா.சங்கர், செங்கல்பட்டு

பதில் 9: மக்கள் மன்றமே இறுதி எஜமானன் – வட இந்தியாவும் நீட் தேர்வின் கொடுமையை உணர்ந்துவிட்டதே – விடியல் நிச்சயம்!

——–

கேள்வி 10: கருநாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. ஆனால், அங்கே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பறி கொடுத்துள்ளதே, அதற்கு என்ன காரணம்?

– க.சரவணகுமார், கன்னியாகுமரி

பதில் 10: மெத்தனமும், கோஷ்டிச் சண்டையும்தான்! “பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்தான்”!

No comments:

Post a Comment