காளையார் கோவிலில் கோள்கள் அணிவகுப்பு திருவிழா மாவட்ட ப.க. ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

காளையார் கோவிலில் கோள்கள் அணிவகுப்பு திருவிழா மாவட்ட ப.க. ஏற்பாடு

featured image

காரைக்குடி, ஜூன் 6- சிவ கங்கை அஸ்ட்ரோ கிளப் மற்றும் காரைக்குடி கழக மாவட்டம் காளை யார்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஒரே நேர்க் கோட்டில் கோள்கள் வரிசை கட்டி வந்து நிற்கும் அதிசய நிகழ்வை காணும் வகையில் “கோள்கள் அணிவகுப்பு திருவிழா” என்ற தலைப்பில் பொதுமக்கள் கோள்களை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகம் முழுக்கவே தெரிந்த இந்த நிகழ்வை காளையார்கோவிலும் ஜுன் 1,2,3 ஆகிய மூன்று நாட்களும் அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை வெறும் கண்களாலும், தொலை நோக்கி மூலமும், மழை மேகங்கள் மறைத்த நேரங்களில் மொபைல் ஆப் மூலமும் Mercuryஎனும் புதன் கோள், செவ்வாய் எனும் மார்ஸ், வியாழன் எனும் ஜூபிடர், சனி எனும் Saturn மற்றும் நெப்டியூன், யூரேனஸ் எனும் ஆறு கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.

“வாருங்கள் இணை வோம், அறிவியல் அறி வோம்” எனும் தலைப்பில் வானியல் குறித்தும் கோள்கள் குறித்தும் பகுத்த றிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஒ.முத்துக்குமார் விளக்கம ளித்ததோடு மட்டுமல்லாது நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அக்கோள்களின் படங்க ளுடன் கூடிய தகவல்கள் அடங்கிய அட்டைகளும் வழங்கப்பட்டது.
வானியல் குறித்த விழிப்புணர்வை அனை வரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரவர் வசிக்கும் இடத்திலிருந்தே அந்நிகழ்வை காண்பதை செல்பி எடுத்து அனுப்ப அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அனுப்பிய ஒளிப்படங்களில் சிறந்த மூன்று ஒளிப் படங்களை தேர்வு செய்து அப்படங்களை அனுப்பியவர்களுக்கு சான்றிதழும், புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.

அதிகாலைப் பொழுது என்ற போதிலும் காளையார்கோவில் கோபுர வாசல் முன்பு நடைபெற்றதால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை சிவ கங்கை அஸ்ட்ரோ கிளப் பொறுப்பாளர்களும், காளையார்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களும் இணைந்து வெகு சிறப்பாகச் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment