இந்தூரில் நோட்டாவுக்கு இரண்டாம் இடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 5, 2024

இந்தூரில் நோட்டாவுக்கு இரண்டாம் இடம்!

இந்தூர், ஜூன் 5 கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவுக்கு தாவியதில், இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2,02,212 வாக்குகள் குவிந்தன. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அக்‌ஷய் காந்தி என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் தேர்தலுக்கு முன்னதாக அவர் பாஜகவுக்கு தாவினார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே சீற்றத்தையும், வாக்களர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா என்பவரின் தலையீடு காரணமாக, இந்தூர் காங்கிரஸ் வேட்பாளரான அக்‌ஷய் காந்தி பாஜகவுக்கு விலைபோனதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

கட்சித் தாவலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி சார்பிலான தனது வேட்புமனுவை அக்‌ஷய் திரும்பப் பெற்றிருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கான வேட்பாளர்கள் குழப்பத்தில் ஆளானார்கள். தங்களது வாக்காளர்கள் குழப்பம் போக்க காங்கிரஸ் ஓர் அதிரடி முடிவை அறிவித்தது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க விரும்புவோரும், பாஜகவுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புவோரும் நோட்டாவுக்கு வாக்களிக்கும்படி காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது.
அரசியல் களத்தில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக நேற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகத் தொடங்கியதுமே பாஜகவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாஜக வேட்பாளர் ஷங்கர் லால்வானி முன்னிலை வகித்தபோதும் அவருக்கு அடுத்தபடியாக சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் நோட்டா இரண்டாம் இடம் பெற்றிருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவுக்கு தாவியதில் நிலைகுலைந்திருந்த காங்கிரஸார் இந்த நோட்டா வாக்குகளை கொண்டாடி வருகின்றனர். மக்களவைத் தலைவர் இருக்கையில் வீற்றிருந்த சுமித்ரா மகாஜன் இந்தூர் தொகுதியில் தொடர்ந்து எட்டு முறை வென்றுள்ளார். இந்த வகையில் 1989 முதலே பாஜகவின் கோட்டையாக நீடிக்கும் இந்தூரில் இம்முறையும் அக்கட்சி வெல்லவே அதிக வாய்ப்புகள் தென்பட்டன. ஆனால் வெற்றி மிதப்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை திரும்பப் பெற வைத்து, பாஜகவில் இணைத்ததில் பாஜகவின் வெற்றியில் களங்கம் சேர இருக்கிறது. நோட்டாவை வென்ற கட்சி என்ற பெயரும் பாஜகவுக்கு இந்தூரில் சேர இருக்கிறது.

No comments:

Post a Comment