கூட்டணிக் கட்சிக்காரர்களின் நிபந்தனைகளை மீறி பி.ஜே.பி. தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 6, 2024

கூட்டணிக் கட்சிக்காரர்களின் நிபந்தனைகளை மீறி பி.ஜே.பி. தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே!

featured image

* தமிழ்நாட்டிற்கு 9 முறை பிரதமர் மோடி வந்தும் தோல்வி! தோல்வியே!!
* என்.டி.ஏ. வெற்றி என்பது தோல்விக்குச் சமமான வெற்றியே!
* ‘இந்தியா கூட்டணி’யினரின் முடிவு முதிர்ச்சியானது, வரவேற்கத்தக்கது!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பி.ஜே.பி.க்கு இப்பொழுது கிடைத்துள்ளது – தோல்விக்குச் சமமான வெற்றியே! கூட்டணிக் கட்சிக்காரர்களின் நிபந்தனைகளை மீறி மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி தொடருமா? என்பது கேள்விக் குறியே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
18 ஆவது பொதுத் தேர்தல் முடிவுகளில், நரேந்திர மோடி அவர்களும், அவரது ஏவுகணைகளும் உறுதிபட உச்சரித்த 400 எண்ணிக்கை வெற்றி என்ற பேராசை, பொய்யாய், பழங்கதையாய், கனவாகி, கானல் நீர் வேட்டையாகி விட்டது!
தேர்தல் பரப்புரை என்ற பெயரால் பிரதமர் மோடி தரம் தாழ்ந்து இந்தியா கூட்டணிமீது வைத்த அபாண்ட குற்றச்சாற்றுகள் (‘‘இந்துக்களின் தாலியைப் பறித்து முஸ்லிம்களுக்குத் தந்து விடுவார்கள் – ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோவிலின் இதுவரைத் திறக்கப்படாத ரகசிய அறையின் சாவி தமிழ்நாட்டுக்காரர்களிடம்தான் இருக்கிறது’’ என்பனபோன்றவை!) எதுவும் எடுபடவில்லை.

‘‘ஸநாதன எதிர்ப்பாளர்கள் – இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி இராமர் கோவிலை இடித்து, பழையபடி பால இராமரை டெண்டுக்கே அனுப்பி விடுவார்கள்.” ‘‘நான் பாரத மாதாவினால் அனுப்பப்பட்ட பிரதமர். என் தாய் வழியில் நான் இயற்கையாகப் பிறந்தவன் அல்லன்’’ என்றெல்லாம் அவர் வாரி விட்ட வாய்ப் பிரச்சாரங்களும், ரோட் ஷோக்களும் அவரது தொகுதியில்கூட அவருக்குக் கைகொடுக்கவில்லை. கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் கிடைத்த 5 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இம்முறை கிடைக்காமல், இடையில் பின்னடைவு ஏற்பட்டு, பிறகே கரையேற முடிந்தது – ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசமாகக் குறைந்தது.

தமிழ்நாட்டிற்கு 9 முறை
பிரதமர் மோடி வந்தும் தோல்வியே!
தமிழ்நாட்டினைக் குறி வைத்து ஒன்பது முறை இடை யறாது வந்தார்! போகாத பெரிய கோவில்களே கிடையாது; கடைசியாக தியானம் என்ற வித்தையும் மறைமுகத் தேர்தல் பிரச்சாரம்போல நடைபெற்றது!
என்றாலும், 400 இடங்கள் கிட்டாதது மட்டுமல்ல; அறுதிப்பெரும்பான்மைகூட கிட்டாமல், ஆட்சி அமைக்க இரண்டு, மூன்று ஊன்று கோல்களைத் (Crutches) தேடி, நாடி, ஓடவேண்டிய நிலையே ஏற்பட்டது!
வட இந்திய மாநிலங்களில் உ.பி.யில் 80 இடங்களில் – அதிக எண்ணிக்கையில் இந்தியா கூட்டணிக்குக் (சமாஜ்வாடி – அகிலேஷ் யாதவ் கட்சி, காங்கிரஸ் மற்ற ஒடுக்கப்பட்டோர் அணி) வெற்றி கிடைத்தது. ஆளும் பா.ஜ.க.வுக்கு இவர்களைவிடக் குறைவான இடங்களே கிடைத்தன; வாக்காளர்கள் பா.ஜ.க. முகத்தில் கரியைத் தடவினார்கள்! (இந்தியா கூட்டணி 44; பா.ஜ.க. 36).
தென்மாநிலங்களில், தெலங்கானா, கருநாடகா முதலிய மாநிலங்களில் என்ன காரணத்தினாலோ (பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் கூட முக்கிய காரணிகளாக இருக்கலாம்) எதிர்பார்த்த வெற்றிகள் இந்தியா கூட்டணிக்குக் கிடைக்கவில்லை.

எண்ணிக்கை குறைந்தது!
தமிழ்நாடு என்னும் திராவிடக் கடற்பாறையில் பி.ஜே.பி. முளைக்காது என்பது நிரூபணம் ஆகிவிட்டது!
தமிழ்நாடு – மீண்டும் இந்த ‘‘கடற்பாறை திராவிடர் கொள்கை நிலத்தில்” ஒருபோதும் தாமரை முளை விடாது – முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டது! சவடால் சண்ட மாருத சந்தைப் பேச்சாளியான அரைவேக்காடுகள் தொடங்கி, ‘அமிர்தகால வெறுப்பு விஷத்தை’ விநியோகித்தவர் வரை எல்லோரையும் மூலையில் தள்ளி, ‘‘நாற்பதற்கு நாற்பது” என்று சூளுரைத்த முழக்கத்தை ரொக்க செயலாக்கமாகக் காட்டியது!

38 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப்பெரும்பான்மைக்கு குறைவாகவே எண்ணிக்கை இருந்ததால், குறுக்கு வழியிலோ, சறுக்கு முறைகளிலோ பதவி – ஆட்சிக்கு முயற்சிக்காமல், ‘‘சரியான ஜனநாயக, அரசமைப்புச் சட்டப் பாதுகாவலர்களாக இருப்போம். தானே கனியும்வரை காத்திருப்போம் – எந்தவித குறுக்கு வழியும் தேவையில்லை. ‘தன்னிச்சைப்படி தரணி ஆளுவோம்’ என்ற பா.ஜ.க.வின் இதற்கு முந்தைய தாம் திரிகிட தன்மை இனி நடக்காது – நடக்கவிட முடியாதபடி மக்கள் நம்மை உண்மையான ‘சவுக்கிதாரர்களாக்கி’ உட்கார வைத்துள்ளதால், அந்த ஜனநாயக காப்பு சேனையாக இருந்து, அரசமைப்புச் சட்டப்படிக்கான ஆட்சி நடக்க, கண்காணிப்புக் குழுவாக அடக்கத்துடன் நாடாளுமன்றப் பணி புரிவோம்” என்று நேற்று (5.6.2024) இந்தியா கூட்டணியினர் முடிவு எடுத்தது சாலச் சிறந்த சரித்திரம் படைக்கும் முடிவு – சபலங்களுக்கு ஆளாகாத முதிர்ச்சியின் முத்திரையாகும்!
இந்தத் தேர்தல் முடிவுகள் மிகவும் விசித்திரமான வித்தாரத் தனமானவை என்பதில் அய்யமில்லை.

மோடிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு!
வெற்றி பெற்றதாகக் கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரும் பா.ஜ.க.வுக்கு, ”மோடிக்கீ பரிவார்” என்ற நிலை விடைபெற்று, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், மோடி பரிவாரத்திற்கு எதிராக உள்ள நிலை ஒருபுறம்; ஆட்சி அமைத்தாலும், அதன் வெற்றி Pyrrhic victory (பியரிக் விக்டரி) என்ற தோல்விக்குச் சமமான வெற்றியேயாகும்!
இந்தியா கூட்டணிக்கோ, தோல்வி போன்ற தோற்ற மிருப்பினும்கூட, வெற்றி முகம் கொண்ட வெற்றி வாய்ப்பு நழுவி, வெற்றிகரமான தோல்வி என்றே உலகம் அறியவேண்டிய நிலை!
பதவியேற்கவிருக்கும் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் தொடருமா? என்ற கேள்விக்குறி, விஸ்வரூபக் குறியாகியே நாளும் வரக்கூடும்!

முந்தைய மக்களவையில் துணை சபாநாயகரே இல்லாமல் 5 ஆண்டுகள் ஆட்சி நடந்த ஜனநாயகப் படுகொலை (ஏனென்றால், எதிர்க்கட்சியினருக்கு அந்த வாய்ப்பு தந்தாகவேண்டும் என்ற மரபுப்படி) நடக்க இனி வாய்ப்பிருக்காது!
‘கடவுள் அவதாரங்களை’ நோக்கி மக்கள் கேள்விக் கணைகள்!
‘‘இந்தியா கூட்டணியில் யார் பிரதமர்?” ”நிலையான ஆட்சியைத் தர முடியுமா?” என்பது போன்று முன்பு பா.ஜ.க. கேட்ட கேள்வி, இப்போது பூமராங் ஆகி, ஆட்சி அமைப்போரைப் பார்த்து, நாடே, உலகமே கேட்கும் நிலை ஏற்பட்டுவிட்டது!
‘கடவுள் அவதாரங்களை’ நோக்கி, மக்கள் கேள்விக் கணைகள் புறப்படும்!
‘இராமர்’, பா.ஜ.க.வை கைவிட்டதுபோல, கூட்டணியில் இணைந்துள்ள அரசியல் பேரக்காரர்களுக்கும், ஜனநாயகத்தைக் காத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் இனி உண்டு. இன்றேல், அந்தந்த மாநிலங்களில் அவர்களுக்கும் எதிராக, ஜனநாயக சுனாமி ஏற்பட்டு, கலங்க வைக்கும் வாய்ப்பும் ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
6.6.2024

No comments:

Post a Comment