புதுடில்லி, ஜூன் 7 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் தொண்டர்களின் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேச மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பொதுமக்களின் கவலைகள் மிக முக்கியமானது என்று தெளிவான செய்தியை புரிய வைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியானது உத்தரப்பிரதேசத்தில் 6 தொகுதிகளில் வெற்றிகண்டது. இதேபோல் கூட்டணி கட்சியான சமாஜ்வாடி கட்சி 37 இடங்களில் வென்றது. உத்தரப்பிரதேச வெற்றியால் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, உ.பி. காங்கிரஸ் தொண்டர்களின் அர்ப்பணிப்பையும், உழைப்பையும் பாராட்டி அனுப்பியுள்ள செய்தியில், “உத்தரப்பிரதேச காங்கிரஸின் எனது சகாக்கள் அனைவருக்கும் சல்யூட். நீங்கள் வெயிலிலும், புழுதியிலும் கடுமையாக உழைத்ததைப் பார்த்தேன்.நீங்கள் தலைகுனியவில்லை. அதேநேரம், கடினமான காலங்களில் போராடும் தைரியத்தைக் வெளிப்படுத்தினீர்கள். நீங்கள் சித்திரவதை செய்யப்பட்டீர்கள். பொய் வழக்குகள் போடப்பட்டு நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டீர்கள். பலமுறை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டும் நீங்கள் பயப்படவில்லை. பல தலைவர்கள் பயந்து வெளியேறினாலும் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள்.உத்தரப்பிரதேசத்தின் உணர்வுள்ள மக்களையும், உங்களையும் கண்டு பெருமைப்படுகிறேன். நமது அரசமைப்பை காப்பாற்ற இந்தியா முழுமைக்கும் வலுவான செய்தியை நீங்கள் கொடுத்துள்ளீர்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment