சென்னை, ஜூன்.7- முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்தவர்கள் எல்லாம் தேர்தல் களத்தில் தோற்றனர் என்று தி.மு.க. தெரிவித்துள்ளது. இதுகுறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நடந்து முடிந்துள்ள 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஓர் அருமையான திருக்குறளை நமக்கு நினைவுபடுத்தியுள்ளது. போர் ஒன்று நடக்கிறது. எதிரிகள் போர்க்களத்தை நோக்கித் திரள்கின்றனர். அவர்களைப் பார்த்து, தடுத்து ஒரு வீரன் சொல்கிறான். ‘இதற்கு முன் நிகழ்ந்த போர்களில் என் தலைவரை எதிர்த்துப் போர் புரிந்தவர் பலர். அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் தெரியுமா? அவர்கள் எல்லாம் போர்க்களத்தில் தோற்றனர். எனவே, போர்க்களம் செல்லாதீர்கள். என் தலைவரை எதிர்த்துப் போரிடாதீர் போரிட்டால் நீங்களும் தோற்று விடுவீர்கள். போர்க்களம் செல்லாதீர்கள்’ எனத் தடுத்தான் அந்த வீரன். அவன் கூறியதைக் கேட்காமல் போர்க்களம் சென்று தோற்றவர் பலர். இதனை –
‘என்னைமுன் நில்லன்மின்
தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.’
என்று திருக்குறள் கூறுகிறது.
வைப்புத் தொகை இழப்பு
இதைப்போலத்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்தவர்கள் எல்லாம் தேர்தல் களத்தில் தோற்றனர். அவர்கள் கட்டிய முன் பணத்தையும் இழந்து பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர். அ.தி.மு.க. கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. மேலும், 12 தொகுதிகளில் 2-ஆம் இடத்தையும் இழந்து 3-ஆம் இடத்திற்குச் சென்றுவிட்டது.
தென்சென்னை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் தொகுதிகளில் அ.தி. மு.க.வும், திருவள்ளூர், மத்திய சென்னை தொகுதிகளில், அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் வைப்புத் தொகை பறிகொடுத்துள்ளன. புதுச்சேரியிலும் அ.தி.மு.க. வைப்புத் தொகை இழந்துள்ளது. தென்சென்னை தொகுதியில், அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் மூன்றாம் இடம் பெற்றதுடன், வைப்புத் தொகையையும் பறிகொடுத்துள்ளார்.
அதேபோல், பா.ஜனதா 11 தொகுதி களிலும், அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க. 6 தொகுதிகளிலும், த.மா.கா. 3 தொகுதிகளிலும், அ.ம.மு.க. ஒரு தொகுதியிலும் வைப்புத் தொகை இழந்துள்ளன. நாம் தமி ழர் கட்சி, அனைத்துத்தொகுதிகளிலும் வைப்புத் தொகை இழந்துள்ளது.
அண்ணாமலை தோல்வி
பிரதமர் நரேந்திர மோடியும், தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும், 2024 தேர்தலோடு தமிழ்நாட்டில் உள்ள ஆளும் கட்சி காணாமல் போய்விடும் என்று பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்று, தமிழ்நாட்டில் காணாமல் போய் உள்ளது பா.ஜனதாவும், அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளும் தான்.
தி.மு.க. நாற்பதுக்கு நாற்ப தும் வென்று இந்தியாவிற்கே வழிகாட்டியுள்ளது. தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் தி.மு.க.வின் புதுமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment