ஆர்.எஸ்.எஸ். இதழ் தாக்கு
பானாஜி, ஜூன் 12 மோடி என்னும் தனி மனிதரின் வார்த்தைகளில் அதீத நம்பிக்கையுடன் இருந்த பாஜக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதார்த்த உண்மையை உணர்த்தி இருப்பதாக ஆர்எஸ்எஸ் சார்பு “ஆர்கனைசர்’ பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக “ஆர்கனைசர்’ பத்திரி கையின் அண்மை இதழில் வெளியான கட்டுரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ரத்தன் ஷார்தா கூறியிருப்பதாவது:
அதீத நம்பிக்கையுடன் இருந்த பாஜக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதார்த்த உண்மையை உணர்த்தியுள்ளன. மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைப் பிடிப்பது என்ற பிரதமர் மோடியின் அழைப்பு தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்பதையும், அது எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதையும் அவர்கள் உணரவில்லை. களத்தில் கடும் உழைப்பின் மூலமே இலக்குகளை எட்ட முடியுமே தவிர, சமூக ஊடகங்களில் போஸ்டர்களையும் படங்களையும் பகிர்வதால் எட்ட முடியாது. மாயையில் சிக்கிய பாஜக தொண்டர்களும் தலைவர்களும் நரேந்திர மோடியின் செல்வாக்கில் நம்பிக்கை கொண்டு, தெருக்களில் இருந்த எதார்த்த கள நிலவரம் குறித்து காதுகொடுத்துக் கேட்காமல் இருந்தனர்.
கட்சி வேட்பாளர்களில் 25 சதவீதம் பேர் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுபவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு உள்ளூர் பிரச்னைகளும், வேட்பாளர்களும், கடந்த காலச் செயல்பாடுகள் ஆகியவையும் முக்கிய காரணங்களாகும். இதே காரணங்களால் உள்ளூர் பாஜக தொண்டர்கள் தேர்தலில் ஆர்வமின்றிப் பணியாற்றினர். தேவையற்ற அரசியல் நடவடிக்கைகளும் பாஜக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றதற்கு ஒரு காரணமாகும். இதற்கு உதாரணமாக மகாராஷ்டிரத்தைக் கூறலாம். அங்கு பாஜகவுக்கும் ஷிண்டே பிரிவு சிவசேனைக்கும் போதிய பெரும்பான்மை இருந்த போதிலும் கூட்டணியில் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சேர்க்கப்பட்டது.
இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் சரத் பவார் அரசியலில் ஓய்வு பெற்றிருப்பார்.
காங்கிரஸின் சித்தாந்தத்தை பல ஆண்டுகளாக எதிர்த்து வந்துள்ள பாஜக தொண்டர்கள், தேசியவாத காங்கிரஸுடன் அணிசேரும் முடிவால் புண்பட்டனர். மகாராஷ்டி ரத்தில் முதல்நிலைக் கட்சியாக வருவதற்கு பல ஆண்டுகளாக பாஜக முயற்சித்து வந்துள்ள நிலையில், அஜீத் பவாருடன் அணி சேரும் நடவடிக்கை காரணமாக மற்ற கட்சிகளைப் போன்று பாஜகவும் ஆகிவிட்டது. காவி பயங்கரவாதம் என்று பேசி வந்த காங்கிரஸ் பிரமுகர்களை பாஜகவில் சேர்த்ததும் கட்சியின் பெயரை சேதப்படுத்தியது. இந்த நடவடிக்கையால் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் வேதனை அடைந்தனர். தேர்தலில் பாஜக வுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டதா, இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்டுகிறது. பாஜகவின் களப்பணி அமைப்பு அல்ல ஆர்எஸ்எஸ். என்று அந்தக் கட்டுரையில் ரத்தன் ஷார்தா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment