மாணவர்களுக்கு கட்டணம் இல்லா பயண அட்டை ஜூன் இறுதிக்குள் வழங்க ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

மாணவர்களுக்கு கட்டணம் இல்லா பயண அட்டை ஜூன் இறுதிக்குள் வழங்க ஏற்பாடு

சென்னை, ஜூன் 7 ஜூன் மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (6.6.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 10-ஆம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு 2024-2025 கல்வியாண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்பட வேண்டும். இதில் உள்ள கால அளவைக் கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழகத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையைப் பயன்படுத்தியோ, பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்தோ இருப்பிடத்திலிருந்து பள்ளி வரை சென்று வரலாம்.
இதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து கட்டண மில்லா பயண அட்டையை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியார், அம்பேத்கர் சிலைகள் இடமாற்றமாம்
புதுடில்லி, ஜூன் 7 காந்தியார், பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், அந்த சிலைகள் தற்போது இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா மற்றும் மகாராணா பிரதாப் ஆகியோரின் சிலைகளும் பழைய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் நாடாளுமன்ற நூலகத்துக்கு இடையே இடமாற்றம் செய்யப்படுகின்றன. காங்கிரசின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா கூறுகையில், “மகாராட்டிர வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் சிவாஜி மற்றும் அம்பேத்கர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று குஜராத்தில் முழு வெற்றியை ஈட்ட முடியவில்லை என்ற விரக்தியில் காந்தியார் சிலையையும் அவர்கள் (பாஜக) அகற்றியுள்ளனர். இப்போது சிந்தியுங்கள். அவர்களுக்கு 400 இடங்களை வழங்கியிருந்தால் அரசமைப்பை காப்பாற்றியிருப்பார்களா?” என்றார்.

 

No comments:

Post a Comment