‘‘பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்!’’
உரிய நேரத்தில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்!
புதுடில்லி, ஜூன 6- ‘‘பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்!’’ உரிய நேரத்தில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்! என்று டில்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் முடிவுகள் குறித்து டில்லியில் ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை நடத்தியது. கூட்டணியில் சேருமாறு பிற கட்சிகளுக்கு மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
234 தொகுதிகளில் வெற்றி
நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்ப தற்கான பணிகளில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணிக்கு 234 தொகுதிகள் கிடைத்துள்ளன. குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு இன்னும் 38 நாடா ளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்நிலையில்,தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று (5.6.2024) ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே இல்லத்தில் நடந்தது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா (மூவரும் காங்கிரஸ்), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு (தி.மு.க.), அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாடி), ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், கல்பனா சோரன் (ஜார்கண்ட் முக்திமோர்ச்சா), சரத்பவார், சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), சஞ்சய் ராவத், அரவிந்த் சவந்த் (சிவசேனா உத்தவ் பிரிவு), அபிஷேக் (திரிணாமுல் காங்கிரஸ்). சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), து.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), என்.கே. பிரேமசந்திரன் (புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி), சஞ்சய் சிங், ராகவ் சதா (ஆம் ஆத்மி), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை
கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் பற்றியும் பரிசீலிக்கப்பட்டது. கூட்டணியின் எதிர்கால செயல்திட்டம் பற்றியும் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கார்கே அழைப்பு
கூட்டத்தில், பிற கட்சிகளுக்கு மல்லி கார்ஜுன கார்கே அழைப்பு விடுத்து அவர் பேசியதாவது:-
‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் போட்டியிட்டன. அக்கட்சிகளுக்கு நன்றி.
இந்த தீர்ப்பு பிரதமர் மோடிக்கு எதிரானது. அவரது அரசியல் பாணிக்கு எதிரானது. அவருக்கு தனிப்பட்ட முறையில் மாபெரும் இழப்பு. தார்மீக தோல்வி.
இருப்பினும் அவர் மக்கள் விருப்பத்தை சீர்குலைப்பதில் உறுதியாக இருக்கிறார். நமது அரசமைப்புச் சட்ட முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மாண்புகளிலும், பொருளாதார நீதி, சமூகநீதி, அரசியல் நீதி ஆகியவை தொடர்பான உட்பிரிவுகளிலும் அடிப்படை உறுதிப்பாடு கொண்ட அரசி யல் கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியில் சேரலாம்.
மோடி அரசின் விலைவாசி உயர்வுக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும், சலுகைகள் முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு இது” என்று குறிப்பிட்ட கார்கே, ‘‘மக்கள் தீர்ப்பை உறுதிப்படுத்த, உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
‘‘பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்’’ என்று கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment