தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்துள்ளதா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 10, 2024

தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்துள்ளதா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

featured image

மதுரை, ஜூன் 10- “தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ந்து வருவதாக கூறுவது பொய் என்று மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் கூறினார்.
கூட்டணி கட்சிகள் வெளியேறும்
காங்கிரஸ் கட்சியின் மாநில மேனாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பும் மோடி தன்னையும், தன் போக்கையும் மாற்றிக்கொள்ளவில்லை. அவருக்கு ஆதரவு கொடுக்கும் சந் திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் கட்சிகள் விரைவில் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறும் நிலை வரும்.
பதவி ஏற்ற பின்பு நடக்கும் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரை புதிய அரசு தாண்டுமா? என்பது சந்தேகம்தான். இனிமேலாவது மோடி தனது கட்சியினரையும், கூட்டணிக் கட்சியினரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

வளருவதாக கூறுவது பொய்
ஒன்றிய அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தமிழிசை சவுந்தர ராஜன் ஆளுநர் பதவியை இழந் துள்ளார். தனியாக நின்றால், மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட அண்ணாமலையால் வெற்றி பெற முடியாது. ஆனால், அவர் கோவையை கைப்பற்றப்போவதாக கூறி படுதோல்வி அடைந்துள்ளார். பா.ஜனதாவினரின் வாய் ஜாலத் திற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மயங்கமாட்டார்கள். இதை ராகுல் காந்தியும் நாடாளுமன்றத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி தான் தமிழ்நாட்டில் தற்போதும் நடந்துள்ளது.
அ.தி.மு.க.வுடன் சில காலம் கூட்டணியில் இருந்ததால்தான், பா.ஜனதா இருப்பதே மக்களுக்கு தெரிந்தது. தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ச்சி பெறுவதாக கூறுவது பொய்.

நம்பிக்கை
பா.ஜனதா எதிரியாக நினைப்பது எதிர்க்கட்சிகளை அல்ல. தங்கள் கூட்டணியில் இருப்பவர்களைத்தான். ஆனால், காங்கிரஸ் எப்போதும் மாநில கட்சிகளை கைவிட்டதில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின் வாக்குப்பதிவு எந்திரங்களின் மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது.
பா.ஜனதாவுக்கும். அதன் கூட்டணிக் கட்சியினருக்கும் பண பேரத்தில் மட்டுமே ஒற்றுமை இருக்கும். கொள்கை ரீதியாக ஒற்றுமை இருக்காது. இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் பலம் வாய்ந்தவையாக உள்ளன. எனவே இந்த கூட்டணிக் கட்சிகளின் அடிப்படை கொள்கைகளில் எப்போதும் ஒற்றுமை இருக்கும். அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்ற பின்பு அந்த கட்சி வலுவிழந்துவிட்டது.
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment