ராகுல்காந்தி உறுதி!
புதுடில்லி, ஜூன் 10- ‘நீட்’ தேர்வு முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பேன் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
‘நீட்’ தேர்வு முறைகேடு
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி் வெளியிடப்பட்டன. அதில், இதுவரை இல்லாத வகையில் 67 பேர் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மய்யத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனால், நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். மறுதேர்வு நடத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
24 லட்சம் மாணவர்கள்
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே ‘நீட்’ தேர்வில் முறைகேடுகள் நடந்து 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் சிதைத்துள்ளது. ஒரு தேர்வு மய்யத்தில் இருந்து 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுடன் தேர்வில் முதலிடம் பெற்றனர். இன்னும் பலர் சாத்தியமே இல்லாத மதிப்பெண்களைப் பெற்றனர். ஆனாலும் வினாத்தாள் கசிவை இந்த அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது
மாணவர்களின் குரலாக ஒலிப்பேன்
கல்வி மாபியா மற்றும் அரசு எந்தி ரத்துடன் இணைந்து இயங்கும் இந்த வினாத்தாள் கசிவு தொழிலை சமாளிக்க காங்கிரஸ் ஒருவலுவான திட்டத்தை வகுத்தது.
ஒரு சட்டம் இயற்றுவதன் மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள் கசிவில் இருந்து விடுதலை அளிப்பதாக நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளோம்.
இன்று நான் நாட்டின் மாணவர்கள் அனைவருக்கும் ஓர் உறுதி அளிக்கிறேன். நாடாளுமன்றத்தில் ‘நீட்’ பிரச்சினையில் உங்கள் அனைவரின் குரலாக வலுவாக ஒலிப்பேன். உங்கள் எதிர்காலத்துக்காகக் குரல் கொடுப்பேன்.
-இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment