ஆசிரியர் அய்யா அவர்கள் 91 வயதிலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று, அவருடைய கருத்துகளை மக்கள் முன் பதிய வைத்தார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 11, 2024

ஆசிரியர் அய்யா அவர்கள் 91 வயதிலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று, அவருடைய கருத்துகளை மக்கள் முன் பதிய வைத்தார்!

featured image

சிலர் ஜாதி உணர்வுடன் இன்னமும் இருக்கிறார்கள்; அந்த உணர்வுகளையெல்லாம் தகர்த்தெறியவேண்டும் என்றால்,
ஆசிரியர் அய்யா அவர்களின் பிரச்சாரம் தேவை! தேவை!!
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாழ்த்துரை

கடலூர், ஜூன் 11 ஆசிரியர் அய்யா அவர்கள் 91 வயதிலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று, அவருடைய கருத்துகளை மக்கள் முன் பதிய வைத்தார். மக்கள் ஆசிரியர் அய்யாவின் கருத்துகளை நன்றாக உள்வாங்கவேண்டும்; சிலர் ஜாதி உணர்வுடன் இன்னமும் இருக்கிறார்கள். அந்த உணர்வுகளையெல்லாம் தகர்த்தெறியவேண்டும் என்றால், ஆசிரியர் அய்யா அவர்களின் பிரச்சாரம் தேவை! தேவை!! என்றார் வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்.

த.தேசிங்ராஜன் – அருள்மொழி
இல்ல மணவிழா!
கடந்த 9.6.2024 அன்று காலை, கடலூர், திவான்பகதூர் சுப்பராயலு (ரெட்டியார்) திருமண மண்டபத்தில் த.தேசிங்ராஜன் – அருள்மொழி ஆகியோரின் இளைய மகன் தே.தமிழரசன் அவர்களுக்கும், தி.குணசேகரன் – அனிதா ஆகியோரின் மூத்த மகள் கு.பிரியதர்ஷனி அவர்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மணவிழாவில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் மணவிழா!
அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்ததோடு, மணமக்களை வாழ்த்தி உரையாற்றவிருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே,
இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழக மாவட்டப் பிரதிநிதி கி.கோ.செல்வமணி அவர்களே,
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நண்பர் இள.புகழேந்தி அவர்களே,
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அவர்களே,
கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா அவர்களே,
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் நண்பர் செந்தில்குமார் அவர்களே,
மற்றும் இம்மணவிழாவில் கலந்துகொண்டிருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும், திராவிடர் கழகத் தோழர்கள், அனைத்துக் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் அய்யா அவர்களை சென்னையில் சந்தித்து
நன்றி கூறினோம்!
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் அய்யா அவர்களை வைத்துக்கொண்டு நான் உரையாற்றக்கூடாது. இருந்தாலும், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அவரை சென்னையில் அவரது இல்லத்தில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி வெற்றி பெற்றமைக்காக, அவரைச் சந்தித்து நன்றி கூறினோம். அப்போது இந்நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
91 வயதிலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தமிழ்நாடு முழு வதும் மேற்கொண்டார் ஆசிரியர் அய்யா அவர்கள். தருமபுரி மாவட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் மணி அவர்களுக்கும், கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத்திற்காகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதற்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற அடிப்படையிலும், இம்மணவிழாவிற்கு வரவேண்டும் என்ற அடிப்படையிலும் இங்கே வந்திருக்கின்றேன். ‘‘இது எங்கள் வீட்டுத் திருமணம்” என்று உரிமையாக என்னை அழைத்தார்கள்.
தி.மு.க. அவைத் தலைவராக கி.கோ. அவர்கள் வயதானாலும் உறுதியுடன் பணியாற்றியவர்.

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 38 ஆயிரம் வாக்குகள் – நன்றி!
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நம்முடைய கடலூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் விஷ்ணுபிரசாத் அவர்கள் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் கைசின்னத்தில் 38 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றமைக்காக இந்தப் பகுதி வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 86 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
அந்தத் தொகுதிப் பிரச்சாரத்திற்காகவும் ஆசிரியர் அய்யா அவர்கள் வந்தார்கள்.
ஆக, தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று, அவருடைய கருத்துகளை மக்கள் முன் பதிய வைத்தார்.

ஆசிரியர் அய்யாவின் பிரச்சாரம் நாட்டிற்குத் தேவை! தேவை!!
இன்னும் மக்கள் ஆசிரியர் அய்யாவின் கருத்துகளை உள்வாங்கவேண்டும்; ஒரு பக்கம் சிலர் ஜாதி உணர்வுடன் செல்கிறார்கள். அந்த உணர்வுகளையெல்லாம் தகர்த்தெறிய வேண்டும் என்றால், ஆசிரியர் அய்யா அவர்களின் பிரச்சாரம் தேவை! தேவை!!
தமிழ்நாட்டில் பி.ஜே.பி. வளராததற்குக் காரணம் தந்தை பெரியாரின் கருத்துகள்தான்!
பெரியார் அய்யா எப்படி 95 வயதிலும் தன்னுடைய கருத்துகளை மக்களிடையே பதிய வைத்த காரணத்தி னால்தான், தமிழ்நாட்டில், பி.ஜே.பி., என்ற கருநாகம் வளர முடியாமல் இருக்கிறது.
இன்றைக்கு அதனை வளர வைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை முறியடிப்பதற்கு ஆசிரியர் அய்யா அவர்கள் 91 வயதிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒரு மணிநேரத்திற்கு மேலாகவும் மக்களிடையே பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.
இம்மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் தங்களது உழைப்பாலும் கருத்துகளை மக்களிடையே பதிய வைத்துள்ளார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணமக்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக உருவாக்கிக் காட்டுவோம்!
ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் ஆகிறது. இன்னும் இரண்டாண்டு காலத்தில், கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக உருவாக்கிக் காட்டுவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு வேளாண் துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

No comments:

Post a Comment